உள்ளூர் செய்திகள்
போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கொலை வழக்கில் வாலிபர் கைது - போலீஸ் நிலையம் முற்றுகையால் பரபரப்பு

Published On 2021-12-26 08:44 GMT   |   Update On 2021-12-26 08:44 GMT
ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். போலீஸ் நிலையம் முற்றுகையால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பெரிய கொமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 38), டி.வி. விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ஷோபனா ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிந்தராஜ் கொலை செய்யப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் இந்த கொலை தொடர்பாக ஒருவர் சரண் அடைந்தார்.

இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், பெரிய கொேமஸ்வரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (36) என்பதும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும், தற்போது திருந்தி ஆட்டோ ஓட்டி வருவதும் தெரியவந்தது.

தன் மீது மீண்டும் அவப்பெயரை உண்டாக்கும் வகையில் கோவிந்தராஜ் நடந்து கொண்டதால் கொலை செய்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில் வெங்கடேசனை கைது செய்த தகவல் அறிந்த கோவிந்தராஜின் மனைவியும், ஊராட்சி மன்ற தலைவருமான ஷோபனா மற்றும் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது அவா்கள் வெங்கடேசனுக்கு உச்சக்கட்ட தண்டனை வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் கோவிந்தராஜின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News