உள்ளூர் செய்திகள்
கோவிட் மெகா தடுப்பூசி முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்த போது எடுத்த படம்

2-வது டோஸ் தடுப்பூசி போடாதவர்களின் எண்ணிக்கை 95 லட்சம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2021-12-26 06:17 GMT   |   Update On 2021-12-26 06:17 GMT
16-வது மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் இன்று தமிழநாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை:

தமிழ்நாடு முழுவதும் இன்று 16-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.

சென்னையில் கிண்டி மடுவங்கரையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஒரு இயக்கமாக மாற்றப்பட்டு பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.

16-வது மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் இன்று தமிழநாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது. இதில் சென்னையில் 1600 இடங்களில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பு 80 லட்சம் வரை உள்ளது. 2-ம் தவணை தடுப்பூசி போடாதவர்கள் எண்ணிக்கை 95 லட்சம் ஆக உள்ளது. அவர்களை அழைத்து வந்து தடுப்பூசி போட ஏற்பாடு நடந்து வருகிறது.

சென்னையில் 78 லட்சம் பேர் உள்ளனர். இதில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 55 லட்சத்து 31 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் முதல் தவணை தடுப்பூசி 89 சதவீதம் பேருக்கும் 2-ம் தவணை 66 சதவீதம் பேருக்கு மேல் போடப்பட்டுள்ளது.

பிரதமர் நேரந்திர மோடி நேற்று பேசுகையில், 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி ஜனவரி 3-ந் தேதி முதல் போடப்படும் என்று அறிவித்துள்ளார். இதேபோல் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி ஜனவரி 10 முதல் போடப்படும் என்று அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர்கள் 33 லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கு 3-ந் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும்.

சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த தடுப்பூசி போடும் பணியை நான் தொடங்கி வைக்க உள்ளேன்.



இதேபோல் ஜனவரி 10-ந் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி 60 வயது நிரம்பியவர்களுக்கும் மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கும் போடப்பட உள்ளது.

இதில் 60 வயது நிரம்பிய முதியவர்கள் 1 கோடியே 4 லட்சம் பேர் உள்ளனர்.

மருத்துவர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் 9 லட்சத்து 78 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கும் 10-ந் தேதி பூஸ்டர் தடுப்பூசி போடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News