உள்ளூர் செய்திகள்
பொதுமக்களிடம் இருந்து அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் மனுக்கள் பெற்றுக்கொண்ட காட்சி.

மக்களுக்கான அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் நிறைவேற்றி வருகிறார்- அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேச்சு

Published On 2021-12-24 10:24 GMT   |   Update On 2021-12-24 10:24 GMT
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அரசு மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாநகர் பகுதியில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகின்றனர்.

இன்று 2-வது நாளாக திருப்பூர்-ஊத்துக்குளி சாலை பாளையக்காடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பூர் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் குறைகேட்பு முகாம் நடைபெற்றது.

இதில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றனர்.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் மட்டுமல்லாது மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அவை விரைவில் மக்களுக்கு சென்றடையும் வகையில் தமிழக முதல்வர் பணியாற்றி வருகிறார்.

மக்கள் குறைகேட்பு முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு உள்ளார் என்றார்.

இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் , மாவட்ட கலெக்டர் வினீத் , மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் ,தி.மு.க. மாநகர பொறுப்பாளர்கள் டி.கே.டி. நாகராஜ், தினேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அரசு மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்தநிலையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 4, வார்டு 57 முருகம்பாளையம், தந்தை பெரியார் நகர் பிரதான சாலையில் இன்று  நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம்மதிப்பில்  மழைநீர் வடிகால் மற்றும் சிறு பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார்.

மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் முன்னிலை வகித்தார். தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News