செய்திகள்
அமைச்சர் மா சுப்பிரமணியன்

மழைக்காலத்திலும் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2021-11-09 03:53 GMT   |   Update On 2021-11-09 03:53 GMT
கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்க மழைக்காலத்திலும் முககவசம் அணிவது அவசியம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை:

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர், கோட்டூர் ஜிப்ஸி காலனியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இந்த ஆய்வின்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறைகளுடன் கூட்டம் நடத்தி, குடிநீர்-கழிவுநீரகற்றுத்துறை, மாநகராட்சி நிர்வாகம், தமிழ்நாடு மின்சாரத்துறை என்னென்ன பணிகளை செய்திட வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

அந்தவகையில் குடிநீர், கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் பள்ளமான பகுதியில் இருக்கிற குடியிருப்புவாசிகளை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து, அவர்களுக்கு 3 வேளை உணவும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் அவர்களுக்கு மாநகராட்சியும், மருத்துவத்துறையும் இணைந்து மருத்துவ முகாம்கள் மூலம் மழைக்கால சிகிச்சை அளிக்கிற பணியும் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் மின் இணைப்பு தர முடியாத நிலை இருந்துக் கொண்டிருக்கிறது. பெரிய அளவிலான பாதிப்புகளை தவிர்ப்பதற்காக தண்ணீர் தேங்கி உள்ள இடங்களில் மின் துண்டிப்பு செய்திருக்கிறார்கள். இது பொதுமக்களுக்கு இடையூறு என்றாலும் தண்ணீர் வடிந்த பிறகுதான் மின் இணைப்பு தருவது சாத்தியம் ஆகும். எனவே இந்த சிரமங்களை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

கோட்டூரில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான இடத்தில் வசிக்கும் நரிக்குறவர்களுக்கு அந்த இடத்தை பெற்றுத்தந்து, அதற்கு பதிலாக அரசு சார்பில் வேறு இடம் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

முதல்-அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்றிருப்பவர்கள், 2 நாட்களுக்கு சென்னை திரும்பாமல் இருப்பது பாதுகாப்பானது. போக்குவரத்து நெரிசல், மழைநீரில் சிக்கி கொள்வதை தவிர்க்கலாம்.

முககவசம் என்பது கண்டிப்பாக தொடர்ந்து அணிய வேண்டும். தற்போது மழைக்காலத்திலும் முககவசம் அணிந்து கொரோனா தொற்றை கட்டுக்குள் வைத்திருப்போம். டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News