செய்திகள்
புதிய கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ரூ.102 கோடியில் உயர்கல்வி துறைக்கு புதிய கட்டிடங்கள்- மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

Published On 2021-10-28 08:44 GMT   |   Update On 2021-10-28 09:54 GMT
புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடங்கள், ஆய்வகங்கள், பல்நோக்குக் கூடம், கூட்டரங்கம், கழிவறைகள், விடுதிகள், பணியாளர் அறைகள், புத்தாக்க மையம் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச்செயலகத்தில், உயர்கல்வித்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கலைக் கல்லூரிகள், அரசு தொழில்நுட்பக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அறிவியல் மையம் ஆகியவற்றில் 102 கோடியே 94 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடங்கள், ஆய்வகங்கள், பல்நோக்குக் கூடம், கூட்டரங்கம், கழிவறைகள், விடுதிகள், பணியாளர் அறைகள், புத்தாக்க மையம் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 கூடுதல் வகுப்பறைகள், 2 ஆய்வகக் கட்டிடம் மற்றும் இதர கட்டிடங்கள்; செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லூரியில் 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 கூடுதல் வகுப்பறைகள்;

சென்னை மாவட்டம், வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரியில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்குக் கூடம்; காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1 கோடியே 87 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 கூடுதல் வகுப்பறைகள், 2 ஆய்வகக் கட்டிடங்கள் மற்றும் 2 கழிவறை தொகுதிகள்.

இதே போல் கிருஷ்ணகிரி, விழுப்புரம், தர்மபுரி, திருவண்ணாமலை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, கோவை, திருப்பூர், திருச்சி, சேலம், பெரம்பலூர், கடலூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரிகள் புதிய கட்டிடங்கள், ஆய்வக வசதிகள் உள்ளிட்ட வசதிகளையும் அவர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், தொழில்நுட்ப கல்வி இயக்குநர் லட்சுமி பிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

Similar News