செய்திகள்
முக ஸ்டாலின்

அரசியல், திருமண நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் தளர்வு- மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Published On 2021-10-23 08:43 GMT   |   Update On 2021-10-23 09:32 GMT
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 1200-க்கும் கீழ் குறைந்துள்ளதால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை:

தமிழகம் முழுவதும் வருகிற 31-ந்தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க வருகிற 31-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இருப்பினும், நவம்பர் 1-ந்தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அது மட்டுமல்லாமல், வடகிழக்கு பருவமழை காலங்களில் டெங்கு காய்ச்சல் மேலும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.



மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 1200-க்கும் கீழ் குறைந்துள்ளதால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்தும், வருகிற தீபாவளி பண்டிகையையொட்டி பொது இடங்களில் கூட்டத்தை தவிர்ப்பது குறித்தும் இன்று நடைபெறும் கூட்டத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

குறிப்பாக, அரசியல், சமுதாய மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடத்துவதற்கான தளர்வுகள், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

அதேப்போல், பண்டிகை காலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்காத வகையில், அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும்.


Tags:    

Similar News