செய்திகள்
அமைச்சர் மா.சுப் பிரமணியன்

தமிழகம் முழுவதும் வீடு வீடாக தீவிர பரிசோதனை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Update: 2021-09-23 08:10 GMT
தமிழகத்தில் கடந்த ஆண்டு 26 ஆயிரம் பேருக்கு டெங்கு பரிசோதனை செய்ததில் 2,410 பேர் பாதிக்கப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. இதுவரை 9 லட்சத்து 47 ஆயிரத்து 284 பேர் பயன் அடைந்துள்ளார்கள்.

இதை மேலும் விரிவுபடுத்த அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளில் 19 வயதானவர்களுக்கு ரத்த அழுத்தம், 30 வயதை கடந்தவர்களுக்கு சர்க்கரை நோய் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு நோய் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு உடனடியாக சிகிச்சை தொடங்கப்படும்.


3-வது மெகா தடுப்பூசி முகாம்
வருகிற ஞாயிற்றுக்கிழமை (26-ந்தேதி) நடக்கிறது. இதற்காக மத்திய அரசிடம் இருந்து இன்று 14 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளது.

தேசிய காது கேளாதோர் வாரத்தையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நடக்கும் நிகழ்ச்சியில் ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி, திருச்சி மற்றும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.75 லட்சம் மதிப்புள்ள நவீன காது, மூக்கு, தொண்டை சிகிச்சைக்கான உப கரணங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

நவீன உபகரணங்கள் மூலம் காது கேட்காத, வாய் பேச முடியாத குழந்தைகளிடம் ஏற்படும் மாற்றங்களும், காணொலி காட்சி மூலம் விளக்கப்பட உள்ளது.

நீட் தேர்வை பொறுத்தவரை அரசின் தீர்மானத்துக்கு கவர்னர் ஒப்புதல் தருவார் என்று நம்புகிறோம். அதன் பிறகு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும். நிச்சயம் இந்த விவகாரத்தில் நல்லதே நடக்கும்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு 26 ஆயிரம் பேருக்கு டெங்கு பரிசோதனை செய்ததில் 2,410 பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்த ஆண்டு இதுவரை 76 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 2733 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே மாவட்டம் தோறும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News