செய்திகள்
உழவன் செயலி.

கிராம விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் திட்டம் - உழவன் செயலி மூலம் பதிவு செய்யலாம்

Published On 2021-09-08 07:30 GMT   |   Update On 2021-09-08 07:30 GMT
விவசாயிகளுக்கு மா, கொய்யா, முருங்கை உள்ளிட்ட நாற்றுக்களில் ஏதேனும் ஒன்று முழு மானியத்தில் வழங்கப்படும்.
மடத்துக்குளம்:

மடத்துக்குளம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் திவ்யா கூறியதாவது:

தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம்-மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம் மடத்துக்குளம் வட்டாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் 125 ஏக்கரில் செயல்படுத்தப்படவுள்ளது. 

அதன்படி துங்காவி, மெட்ராத்தி கிராமங்கள் முக்கிய கிராமங்களாகவும், மைவாடி, தாந்தோணி, ஜோத்தம்பட்டி, வேடப்பட்டி, காரத்தொழுவு, பாப்பான்குளம், குமரலிங்கம், சங்கராமநல்லூர் பகுதி கிராமங்கள் துணைப் பகுதிகளாகவும் சேர்க்கப்பட்டு அங்குள்ள விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்கப்பட உள்ளது.

இந்ததிட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மட்டுமே பயன்பெற முடியும். ஒரு விவசாயிக்கு குறைந்த பட்சம் 2 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். 

இதில் 20 சதவீதம் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 10 விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் வீதம் 25 ஏக்கருக்கு மானியம் வழங்கப்படவுள்ளது.

மேலும் பெண் விவசாயிகளுக்கு 30 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி15 பெண் விவசாயிகளுக்கு 37 ஏக்கருக்கு மானியம் வழங்கப்படும். சிறு குறு விவசாயிகளுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 25 பேருக்கு 62 ஏக்கருக்கு மானியம் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மா, கொய்யா, முருங்கை உள்ளிட்ட நாற்றுக்களில் ஏதேனும் ஒன்று விவசாயிகளுக்கு முழு மானியத்தில் வழங்கப்படும்.

இதனுடன் ஊடுபயிராக சாகுபடி செய்யும் வகையில் பயறு வகை விதைகளும், தக்காளி, மிளகாய் நாற்றுக்களும் வழங்கப்படும். 

அத்துடன் மாடு வாங்குவதற்கு ரூ.15 ஆயிரமும், ஆடு வாங்குவதற்கு ரூ 7500ம் மானியமாக வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

தேர்வு செய்யப்பட்ட விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார், ரேஷன் கார்டு, வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News