செய்திகள்
ஆடுகள்

பக்ரீத் பண்டிகை- ‘குர்பானி’ ஆட்டின் விலை உயர்வு

Published On 2021-07-17 08:50 GMT   |   Update On 2021-07-17 08:50 GMT
சென்னையின் ஆட்டு இறைச்சி தேவையை ஆந்திர ஆடுகளே பூர்த்தி செய்கின்றன. ஆந்திராவில் இருந்துதான் சென்னைக்கு அதிகளவில் ஆடுகள் கொண்டு வரப்படுகிறது.
சென்னை:

பக்ரீத் பண்டிகை வருகிற 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பக்ரீத்துக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் குர்பானி ஆடுகள் இன்று முதல் வெளி மாநிலங்களில் இருந்து சென்னை வரத் தொடங்கி உள்ளன.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குர்பானி ஆட்டின் விலை உயர்ந்துள்ளதாக இறைச்சி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்க மாநில பொதுச் செயலாளர் ராயபுரம் அலி கூறும்போது, குர்பானி ஆடுகள் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரம் வரையில் விற்பனை ஆகிறது.

15 கிலோ எடை கொண்ட ஆட்டின் விலை ரூ.15 ஆயிரமாக உள்ளது. எடை அடிப்படையில் ஆடுகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு 15 கிலோ எடை கொண்ட ஒரு ஆட்டின் விலை ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரம் வரையில் தான் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு விலை கூடி இருக்கிறது.

இன்று முதல் குர்பானி ஆடுகள் வெளி மாநிலங்களில் இருந்து வரத் தொடங்கியுள்ளன. சென்னைக்கு இன்று மட்டும் 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் ஆடுகள் வரை வந்துள்ளன.

திங்கட்கிழமை கூடுதலாக ஆடுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

செங்குன்றத்தை சேர்ந்த ஆட்டு வியாபாரி தமீம் கூறும்போது, பக்ரீத்தையொட்டி இந்த ஆண்டு ஆடுகளின் விலை அதிகமாகவே உள்ளது.

சென்னையின் ஆட்டு இறைச்சி தேவையை ஆந்திர ஆடுகளே பூர்த்தி செய்கின்றன. ஆந்திராவில் இருந்துதான் சென்னைக்கு அதிகளவில் ஆடுகள் கொண்டு வரப்படுகிறது.

ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்தும் ஆடுகள் வரவழைக்கப்படுகிறது.

சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் ஆடு வளர்ப்பு வெகுவாக குறைந்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும் என்று தெரிவித்தார்.

இதுபோன்ற பண்டிகை காலங்களில் எப்போதுமே இறைச்சி விலை அதிக மாகவே இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். பக்ரீத்துக்காக கொண்டுவரப்படும் குர்பானி ஆடுகள் அதற்காகவே வளர்க்கப்படுவதால், அதன் விலை கடைகளுக்கு விற்பனை செய்யப்படும் இறைச்சி ஆடுகளை விட அதிகமாகவே இருக்கும் என்றும், இந்த விலை அடுத்தடுத்த நாட்களில் மேலும் உயருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் இறைச்சி வியாபாரிகள் கூறினார்கள்.

கொரோனா காலம் என்பதால் வெளிநாடுகளில் தங்கி வேலை செய்த பலர் தற்போது வேலையின்றி தவித்து வருகிறார்கள். குறிப்பாக வெளிநாடுகளில் தங்கி வேலை செய்து வந்த முஸ்லிம்கள் பலர் சென்னையில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில் இருக்கிறார்கள். அதுபோன்று பாதிக்கப்பட்டவர்கள் பக்ரீத் பண்டிகையை தங்களது எண்ணப்படி கொண்டாட முடியாத நிலையில் தவித்து வருவதாகவும் வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News