செய்திகள்
பெரியாறு அணை

பெரியாறு அணை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புரளி- கேரள அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு

Published On 2021-07-08 07:43 GMT   |   Update On 2021-07-08 07:43 GMT
தமிழக பகுதிக்காக முல்லைபெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் தேக்குவது கேரள அரசுக்கு பிடிக்கவில்லை. எனவே அணை குறித்து பொய்பிரசாரம் செய்து வருகிறது.
கூடலூர்:

தமிழக-கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. அணையின் மொத்த உயரம் 152 அடியாகும்.

பெரியாறு அணை கட்டி நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் அணை பலமிழந்து வருவதாக கேரள அரசு குற்றம்சாட்டியது. இதனைதொடர்ந்து நீர்மட்டத்தை குறைக்கவேண்டும் என வலியுறுத்தியது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு அணையின் நீர்மட்டம் 142 வரை இருக்கலாம் என தீர்ப்பு வழங்கியது. இதனைதொடர்ந்து பருவமழை தீவிரமடையும்போது அணையில் 142 அடி வரை நீர் தேக்கப்பட்டது.

தற்போது அணையின் நீர்மட்டம் 134 அடியை எட்டிய நிலையில் வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நீர்மட்டம் 129 அடிவரை குறைந்துள்ளது. இருந்தபோதும் மழை பெய்வதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயரக்கூடும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.



கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய மந்திரியை சந்தித்த தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் பெரியாறு அணையில் உச்சபட்ச நீர்மட்டம் தண்ணீர் தேக்குவதை உறுதிசெய்யவேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த நிலையில் வல்லக்கடவு பகுதியில் 2.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவானதாக கேரள பத்திரிகைகளில் செய்தி வெளியானது. ஆனால் இடி-மின்னலுடன் பலத்த மழை மட்டுமே பெய்துள்ளது. எங்கும் நிலநடுக்கம் பதிவாகவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

தமிழக பகுதிக்காக முல்லைபெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் தேக்குவது கேரள அரசுக்கு பிடிக்கவில்லை. எனவே அணை குறித்து பொய்பிரசாரம் செய்து வருகிறது. மூவர் மற்றும் ஐவர் குழுவினர் பலமுறை ஆய்வு செய்து அணை பலமாக இருப்பதை உறுதி செய்துள்ளனர். இருந்தபோதும் கேரள அரசு விஷமத்தனமான செய்திகளை பரப்பி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


Tags:    

Similar News