செய்திகள்
கோப்புபடம்

பா.ஜனதா பிரமுகர்கள் மீது புகார்: எம்.எல்.ஏ. சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி

Published On 2021-07-07 09:59 GMT   |   Update On 2021-07-07 09:59 GMT
எம்.எல்.ஏ. சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக பாஜக பிரமுகர்கள் மீது பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

ஆரணி ஜெயலட்சுமி நகரை சேர்ந்தவர் புவனேஸ்குமார். பா.ஜனதா பிரமுகரான இவர் சென்னை பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

சென்னையை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர்களான விஜயராமன், ரகோத்தமன் ஆகியோர் திருவண்ணாமலை தொகுதியில் எனது சித்தப்பா மகள் வசந்திக்கு எம்.எல்.ஏ. சீட் வாங்கி தருவதாக கூறினார்கள்.

இதற்காக சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து ரூ.50 லட்சம் பணம் வாங்கினார்கள். ஆனால் அவர்கள் கூறியபடி எம்.எல்.ஏ. சீட் வாங்கி தரவில்லை.

தேர்தல் முடிந்த பிறகு அந்த பணத்தை திருப்பி கேட்டும் இதுவரை கொடுக்கவில்லை. பணத்தை வாங்கிக் கொண்டு இருவரும் மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் குறித்து பாண்டிபஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இருவரும் மத்திய மந்திரி ஒருவரின் பெயரை சொல்லி அவர் மூலமாக எம்.எல்.ஏ. சீட் வாங்கி தருவதாக உறுதி அளித்ததாக தெரிகிறது.

இதனை நம்பியே ஆரணி பா.ஜனதா பிரமுகர் ரூ.50 லட்சம் பணத்தை கொடுத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி பாண்டிபஜார் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதன் பிறகு புகாருக்குள்ளான பா.ஜனதா பிரமுகர் இருவரையும் நேரில் அழைத்து விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபணமானால் இருவரையும் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News