செய்திகள்
விபத்தில் சிக்கிய காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கி கிடந்த காட்சி.

சென்னையில் இருந்து சென்ற கார் மோதி 4 பேர் பலி

Published On 2021-07-05 03:27 GMT   |   Update On 2021-07-05 03:27 GMT
விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. ஆனால் அதில் வந்த டிரைவர் உள்பட 4 பேரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி கக்கன் நகரை சேர்ந்தவர் தயாளன் (வயது 63). ஓய்வுபெற்ற கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க ஊழியர். இவரது மனைவி சந்திரா (55). இவர்கள் 2 பேரும் நேற்று காலை தெற்கு புறவழிச்சாலையில் உள்ள சர்வீஸ் ரோட்டில் நடந்து சென்றனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த விக்கிரவாண்டி ஆகாட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொக்லைன் எந்திர டிரைவர் மணிகண்டன்(33) என்பவரை நிறுத்தி இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சின்னதச்சூர் கிராமத்தை சேர்ந்த செல்வம் (55) என்பவர் தெற்கு புறவழிச்சாலையை கடக்க முயன்றார்.

அப்போது சென்னையில் இருந்து சேலம் நோக்கி வேகமாக வந்த கார் செல்வத்தின் மீது மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தறிகெட்டு ஓடி இடதுபுறத்தில் உள்ள 5 அடி பள்ளத்தில் இருந்த சர்வீஸ் ரோட்டில் சீறிப்பாய்ந்து, அங்கு பேசிக்கொண்டிருந்த தயாளன், சந்திரா, மணிகண்டன் ஆகியோர் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் தயாளன், சந்திரா, செல்வம் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மணிகண்டனை முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் புதுச்சேரி ஜிப்மர் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

விபத்துக்கு காரணமான கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ஜெயபால்(39) என்பதும், துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்த தனது அக்காள் புஷ்பம், அவரது கணவர் செந்தில்குமார், மகள் அனுப்பிரியா ஆகியோரை காரில் ஆத்தூருக்கு அழைத்து சென்றபோது விபத்து நிகழ்ந்ததும் தெரியவந்தது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. ஆனால் அதில் வந்த டிரைவர் உள்பட 4 பேரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான ஜெயபாலை கைது செய்தனர்.
Tags:    

Similar News