செய்திகள்
அமைச்சர் மா சுப்பிரமணியன்

தமிழக ஆஸ்பத்திரிகளில் 45,484 படுக்கைகள் காலியாக உள்ளன- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2021-06-10 06:23 GMT   |   Update On 2021-06-10 06:23 GMT
கொரோனா 2-வது அலை குறைந்து வருவதால் பொதுமக்கள் அலட்சியம் காட்டக்கூடாது. வெளியில் வரும்போது முகக்கவசங்களை கண்டிப்பாக அணிய வேண்டும்.
சென்னை:

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக குறைந்து வருகிறது. நேற்று 17,421 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 31,652 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருவதால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவனைகளில் 45,484 படுக்கைகள் காலியாக உள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரையில் படுக்கைகள் கிடைக்காத நிலை இருந்தது. அந்த நிலையை தற்போது மாற்றி இருக்கிறோம். விரைவில் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பு இல்லாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதுவரை ஒரு கோடியே 1 லட்சத்து 6,300 தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வந்துள்ளன. இதில் 97 லட்சத்து 62 ஆயிரத்து 957 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

தற்போது சென்னையில் மட்டுமே 1,600 தடுப்பூசிகள் உள்ளன. 36 மாவட்டங்களிலும் தடுப்பூசிகள் இல்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.


மத்திய அரசு ஜூன் மாதத்துக்கான தொகுப்பில் இருந்து 37 லட்சம் தடுப்பூசிகள் தருவதாக தெரிவித்துள்ளன. இதில் வருகிற 13-ந்தேதிக்குள் 6 லட்சம் தடுப்பூசிகள் வரும் என்று காத்திருக்கிறோம்.



ஜூன் 21-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் பணி தீவிரப்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கு தேவையான ஒதுக்கீடுகளை கேட்டு பெற முடிவு செய்துள்ளோம்.

கொரோனா 2-வது அலை குறைந்து வருவதால் பொதுமக்கள் அலட்சியம் காட்டக்கூடாது. வெளியில் வரும்போது முகக்கவசங்களை கண்டிப்பாக அணிய வேண்டும். தேவையின்றி வெளியில் வரக்கூடாது. அரசின் அறிவுரைகளை அனைவரும் கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவை விரைவில் விரட்ட முடியும்.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான ஒருநாள் உணவு ஒதுக்கீடு செலவுத்தொகை ரூ.350 முதல் ரூ.450 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவ பணியாளர்கள் கூடுதல் பலனை பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கும், பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டது.

தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் ஆர்வத்துடன் போட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News