செய்திகள்
மழை

நெல்லை, தென்காசியில் பரவலாக மழை

Published On 2021-06-06 09:34 GMT   |   Update On 2021-06-06 09:34 GMT
நெல்லை மாநகர பகுதியில் கடந்த 2 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பல்வேறு தெருக்களில் மழை நீர் தேங்கியது. மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.

நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கி உள்ளது.

நேற்று நெல்லை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. களக்காடு பகுதியில் ஆங்காங்கே ஒருசில இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்தது.

நெல்லை மாநகர பகுதியில் கடந்த 2 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பல்வேறு தெருக்களில் மழை நீர் தேங்கியது. மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.

அணை பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. 143 அடி கொள்ளளவு கொண்ட பிரதான அணையான பாபநாசத்தில் 134.50 அடி நீர் இருப்பு உள்ளது.

சேர்வலாறு அணையில் 140.58 அடி நீர் இருப்பு உள்ளதால் அணையானது கடல்போல் பரந்து விரிந்து காணப்படுகிறது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. செங்கோட்டை, தென்காசி, சிவகிரி, சங்கரன் கோவில், குண்டாறு, அடவிநயினார் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் மழை பெய்தது.

இந்த மழை காரணமாக அந்த பகுதிகளில் வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவியது. அடவிநயினார் அணை பகுதியில் அதிகபட்சமாக 23 மில்லிமீட்டர் மழை பெய்தது. கருப்பா நதியில் 10 மில்லிமீட்டரும், தென்காசியில் 5.6 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.

இன்று காலை நிலவரப்படி 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையில் 74 அடியும், ராமநதியில் 64 அடியும் நீர் இருப்பு உள்ளது.

தென்மேற்கு பருவமழையும் தொடங்கி உள்ளதால் தென்காசி மாவட்ட விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். கார் சாகுபடிக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News