செய்திகள்
கோப்புப்படம்

திருச்சியில் 60 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா தொற்று

Published On 2021-06-04 08:59 GMT   |   Update On 2021-06-04 08:59 GMT
கடந்த மாதம் திருச்சி மாநகர் மற்றும் லால்குடி, திருவெறும்பூர், மணப்பாறை பகுதிகளில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டது. ஆனால் தற்போது அப்பகுதிகளில் தொற்றுகள் குறைந்துள்ளன.

திருச்சி:

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 59 ஆயிரத்து 869 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 55 சதவீதம் பேர் கடந்த மே மாதத்தில் மட்டும் தொற்றுக்கு ஆளாகினர். தற்போதைய நிலையில் தொடர் சிகிச்சையில் 11 ஆயிரத்து 478 பேர் உள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. திருச்சியிலும் 1,800-ஐ தொட்ட கொரோனா தொற்றின் வேகம் குறைந்துள்ளது. நேற்றைய பரிசோதனை முடிவுகளில் 823 பேர் தொற்றுக்கு ஆளாகினர். கடந்த 5 நாட்களாக 1000-க்கும் கீழ் தொற்று வந்து கொண்டிருக்கிறது. இது அடுத்து வரும் நாட்களில் மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக திருச்சி மருத்துவ கல்லூரி டீன் வனிதா தெரிவித்தார்.

இந்த நிலையில் ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதால் தொற்றாளர்கள் குறைந்து வருவதாக சிலர் சந்தேகம் எழுப்புகிறார்கள். ஆனால் சுகாதாரத்துறை தரப்பில் இதனை திட்டவட்டமாக மறுத்தனர். முன்பு போல தினமும் சராசரியாக திருச்சியில் 5,000 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த மாதம் திருச்சி மாநகர் மற்றும் லால்குடி, திருவெறும்பூர், மணப்பாறை பகுதிகளில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டது. ஆனால் தற்போது மேற்கண்ட பகுதிகளில் தொற்றுகள் குறைந்துள்ளன.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ராம்கணேஷ் கூறும்போது, மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அதிக சாம்பிள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. குறிப்பாக மக்களுடன் தொடர்பில் இருக்கும் வியாபாரிகளுக்கு தனித்தனியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒருவர் தொற்றுக்கு ஆளானால் அவரின் குடும்பம் சார்ந்தவர்கள், தொடர்பில் உள்ளவர்கள் என 30 பேருக்கு பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது.

திருச்சி மாநகராட்சி பகுதியில் பொதுமக்களிடையே பல்ஸ் மற்றும் ஆக்ஸிஜன் அளவு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்த பரிசோதனைகள் நோய் அறிகுறி இல்லாத தொற்றாளர்களை கண்டறியவும், அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவுவது தடுப்பதற்கும் ஏதுவாக அமைந்தது என நகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.

கிராமப்புறங்களிலும் மேற்கண்ட பரிசோதனைகள் வட்டார அளவில் கிராம செவிலியர்கள், உள்ளாட்சி அமைப்பினர், தன்னார் வலர்கள் மூலம் வீடு, வீடாக நடத்தப்பட்டது. இதற்கும் பொதுமக்கள் தரப்பில் நல்ல ஒத்துழைப்பு இருந்தது. இடைவிடாத பரிசோதனைகள், கண்காணிப்புகளால் திருச்சியில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்து கொண்டிருப்பதாகவும், மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் அடுத்த சில நாட்களில் தினசரி தொற்றை 500-க்குள் கொண்டுவரமுடியும் எனவும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags:    

Similar News