செய்திகள்
ரெம்டெசிவிர் மருந்து

பொதுமக்களே உஷார்... ரெம்டெசிவிர் மருந்தை அனுப்புவதாக கூறி ஆன்லைனில் பணம் பறிக்கும் கும்பல்

Published On 2021-05-14 08:39 GMT   |   Update On 2021-05-14 08:39 GMT
ரெம்டெசிவிர் மருந்து முறையாக அரசு மருத்துவமனைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை பயன்படுத்தி குறுகிய நோக்கத்தில் தவறான வழியில் பணம் சம்பாதிக்க சிலர் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை:

கொரோனா நோயாளிகள் அபாய கட்டத்தில் இருக்கும்போது ரெம்டெசிவிர் மருந்தை டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இந்த மருந்தின் தேவை அதிகரித்து வரும் நிலையில் கள்ளச்சந்தையில் அதனை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது அதிகரித்துள்ளது.

போலியான டாக்டர் சான்றிதழ்களை காட்டி அரசு மருத்துவமனைகளில் குறைந்த விலைக்கு விற்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், மருந்து கடை பணியாளர்கள் ஆகியோர் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ரெம்டெசிவிர் மருந்தை பயன் படுத்தி ஆன்லைன் மூலமாக பணம் பறிக்கும் முயற்சியிலும் மோசடி கும்பல் ஒன்று களம் இறங்கி உள்ளது.

இது தொடர்பாக சென்னை போலீஸ் இணை கமி‌ஷனர் பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர் தனது முக நூலில் நேற்று மாலை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

ரெம்டெசிவிர் மருந்து முறையாக அரசு மருத்துவமனைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை பயன்படுத்தி குறுகிய நோக்கத்தில் தவறான வழியில் பணம் சம்பாதிக்க சிலர் திட்டமிட்டுள்ளனர்.

ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதாக கூறி யாராவது ஆன்லைனில் விளம்பரம் செய்தால் அதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம். அதுபற்றி உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இதுபோன்ற இக்கட்டான கால கட்டத்தில் குறுகிய நோக்கத்தில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள்.

இவ்வாறு அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து இணைய தளங்களில் ரெம்டெசிவிர் தொடர்பான தகவல்களை வெளியிடுபவர்களை போலீசார் கண்காணிக்க தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி விற்பனை செய்வதாக கிழக்கு மண்டல இணை ஆணையாளர் பாலகிருஷ்ணணுக்கு தகவல் கிடைத்தது. இதுபற்றி அவர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதன்பேரில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வண்டலூர் அருகே கண்டிகையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியின் அருகில் ரெம்டெசிவிர் மருந்துடன் காத்திருந்த விஷ்ணுகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.



அவரிடம் இருந்து 7 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தனியார் மருத்துவக் கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளாக மருந்தாளுனராக ஆக பணியாற்றி வரும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மேலையூரைச் சேர்ந்த விஷ்ணுகுமார் ஒரு குப்பி மருந்தை குறைந்த விலைக்கு வாங்கி ரூ. 18 ஆயிரத்துக்கு விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.

அவரிடம் விசாரணை நடத்தியதில் அவருடன் கோவில்பட்டியில் மருந்தகம் வைத்துள்ள சண்முகம் என்பவர் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் கோவில்பட்டிக்கு விரைந்து சென்று அவரையும் கைது செய்தனர். சண்முகத்திடம் இருந்து 42 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் கைப்பற்றப்பட்டது.

Tags:    

Similar News