செய்திகள்
ராமதாஸ்

மதுக்கடைகளை மூடும் அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும்- மு.க.ஸ்டாலினுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2021-05-07 19:28 GMT   |   Update On 2021-05-07 19:28 GMT
முழு ஊரடங்கை அமல்படுத்துவதுடன் மதுக்கடைகளை மூடும் அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படவேண்டும் என்று பா.ம.க. பலமுறை வலியுறுத்தியும்கூட, மதுக்கடைகளை மூடுவதற்கான ஆணை இப்போதுவரை பிறப்பிக்கப்படவில்லை. கொரோனாவை தடுப்பதைவிட மது விற்பனை செய்வதில் அரசு அதிக ஆர்வம் காட்டுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மது வணிக நேரத்தை குறைப்பதாகக் கூறுவதெல்லாம் ஏமாற்று வேலைதான். தமிழகத்தில் மதுக்கடைகள் தினமும் 10 மணி நேரம் திறந்திருந்தாலும், 3 மணி நேரம் மட்டுமே திறந்திருந்தாலும் விற்பனை குறையாது என்பதை தமிழகத்தின் மது வணிகம் குறித்த நுட்பம் தெரிந்தவர்கள் அறிவர்.

சென்னையில் தமது வீட்டுக்கு முன்பாக, ‘‘அடித்தட்டு மக்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கு. கொரோனா காலத்தில் டாஸ்மாக் எதற்கு?’’ என்ற பதாகையை ஏந்தி போராட்டம் நடத்திய அன்றைய எதிர்க்கட்சித் தலைவர், இன்று முதல்-அமைச்சராகியுள்ள நிலையில் அதே அக்கறை மற்றும் பொறுப்புணர்வுடன் தமிழ்நாட்டில் உடனடியாக முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்; தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்படும்; அடித்தட்டு மக்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை இன்றே வெளியிட வேண்டும்; அவ்வாறு அவர் வெளியிடுவார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News