செய்திகள்
மகேந்திரன்

கமல்ஹாசன் மீது மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய துணைத்தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு

Published On 2021-05-07 07:04 GMT   |   Update On 2021-05-07 07:04 GMT
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் விலகி உள்ளனர்.

சென்னை:

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் விலகி உள்ளனர். தேர்தலுக்கு முன்னரே கமீலா நாசர் வெளியேறிய நிலையில் தற்போது மாநில செயலாளர்கள் பொறுப்பில் இருந்தவர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இதன் மூலம் மக்கள் நீதி மய்யம் கட்சியில் நிலவி வந்த கோஷ்டி பூசல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணைத் தலைவராக பதவியில் இருந்து விலகிய டாக்டர் மகேந்திரன், கமல்ஹாசன் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கமல் கட்சியின் வளர்ச்சிக்காக என்று நியமிக்கப்பட்ட சிலரது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், கட்சியினர் யாருடைய பேச்சையும் கேட்பது இல்லை என்றும் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கனத்த இதயத்துடனும், தெளிவான சிந்தனையுடனும் நான் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து உடனடியாக விலகுகிறேன். 2018-ம் வருடத்தில் தலைவர் கமல்ஹாசனுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்ட பிறகு அரசியலுக்கு வரும்படி என்னை அழைத்தார்.

என்னை மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இணைத்துக் கொண்டு முழு மனதுடன் செயலாற்றினேன். கட்சியினையும், கொள்கைகளையும், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு சென்று சேர்க்கும் பணியினை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் உதவியுடன் செயல்படுத்தினேன்.

2021 சட்டமன்றத் தேர்தலில் நமது தலைவரை முதல்-அமைச்சராக்கிட வேண்டும் என்கிற பெரிய கனவுடன் பயணிக்க தொடங்கினோம். நமது அக்கனவிற்கு துணையாக இருக்கும் என்கின்ற நோக்கத்தில் ‘ஐபேக்‘ நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி, நமது கட்சியின் தேர்தல் வியூகங்களை வகுத்திட அதற்கான ஒப்பந்தமும் ஏப்ரல் 2019-ன் போது கையெழுத்திடப்பட்டு 2019, செப்டம்பர் மாதம் அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டது.

அதன்பின் தலைவரின் முக்கிய ஆலோசகராக இருந்த முன்னாள் டி.வி. மீடியாவினைச் சேர்ந்த மகேந்திரன் மற்றும் சிலர் தலைவருக்கு கொடுத்த ஆலோசனையின் பேரில் “சங்க்யா சொல்யூசன்ஸ்” என்கின்ற ஒரு நிறுவனத்தை சுரேஷ் அய்யர் என்பவரது தலைமையில் தொடங்கி அதனை கட்சியின் தேர்தல் ஆலோசனை நிறுவனமாக உருவாக்கினர்.

“கட்சியின் பிரசார அலுவலகம்” என்கின்ற பொறுப்பினை ஏற்றுக் கொண்ட ஆறுமாத காலத்திற்குப் பிறகும் கூட, அவர்கள் கட்சிப் பிரசாரத்திற்கு பயனுள்ள எவ்வித பணிகளையும் சரிவர செய்யாமல், கட்சிக்கு பெறும் செலவுகளை மட்டுமே உயர்த்திக் கொண்டு இருந்தனர் என்பது எனக்கும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும் புரிந்தது.

இதுகுறித்து தலைவரிடம் நான் தனிப்பட்ட முறையில் தெரிவித்தபோது சட்டமன்ற தேர்தல் வரை மட் டுமே அவர்களின் பங்களிப்பு இருக்கும் என்றும், அவர்களை நானே கண்காணிப்பேன் என்றும், தனது கட்டுப்பாட்டில் தான் அவர்கள் இயங்குவார்கள் என்றும் தலைவர் கமல்ஹாசன் என்னிடம் உறுதியளித்தார்.


அவர்கள் கட்சியினரிடம் பிரித்தாளும் சூழ்ச்சியினையும், அடக்குமுறை அணுகுமுறையினையும் கையாண்டு வருகின்றனர் என்றும், அதன் காரணத்தினால் கட்சிக்கு ஏற்படவிருக்கின்ற ஆபத்தினையும் தலைவரிடம் தொடரந்து எடுத்துச் சொன்னேன்.

அப்போது தலைவர் கமல்ஹாசன், இவர்கள் தேர்தல் வரை மட்டும்தான் நம்முடன் இருப்பார்கள். அதற்கு பிறகு நானே அவர்களை வெளியே அனுப்பி விடுவேன் என்று மீண்டும் என்னிடம் உறுதியளித்தார்.

பிரசார அலுவலகத்தின் செயல்பாடுகள் சரிவர இல்லை என்று பலமுறை தலைவரிடம் தனிப்பட்ட முறையில் எடுத்துச் சொல்லி இருந்தும் கூட, அது குறித்து வெளியே யாரிடமும், தலைவரின் ஆணைக்கிணங்க, நான் பேசியதில்லை.

2020 அக்டோபர் மாதம் நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுக்காக நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில், தலைவரின் அணுகு முறைகளை மாற்றி, தலைவரை தனியாக மேடையில் அமர வைப்பது, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தலைவரை அணுக விடாமல் பார்த்துக் கொள்வது என்று இந்த அதிகார மையம் தடைகளை விதிக்க தொடங்கியது.

அரசியல் ஜனநாயகம் தூக்கி எறியப்பட்டு, பல புதிய பழக்கங்கள் கையாளப்பட்டது. கட்சி மேடையில் தலைவருக்கு மட்டும் தனி இருக்கை, தலைவரின் அறிக்கைகள், கட்சி எடுக்கின்ற முக்கிய முடிவுகள், கட்சி தீர்மானங்கள் என எதையும் கட்சி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிக்காமல் ‘தன்னிச்சையாக’ உருவாக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டு ‘ஏதேச்சதிகாரம்’ நிறைந்த ஒரு அதிகார மையமாக இயங்கத் தொடங்கியது.

சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், கூட்டணி குறித்து தலைவரின் முடிவே இறுதியானது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்ற தேர்தலில் மக்களிடையே பெரிய நம்பிக்கையைப் பெற்று, மாற்று அரசியல் கட்சியாக, மக்கள் நீதி மய்யம் உருவெடுத்த பின்னரும் கூட, 234 தொகுதிகளில் 100 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்தது பொது வெளியிலும், ஊடகங்களில், கட்சி அபிமானிகள், கட்சி தொண்டர்கள், மாநிலச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் என அனைவரிடயே பெரிய அதிர்ச்சியையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியது.

கூட்டணி முடிவான பிறகும் கூட, தமது கட்சி வேட்பாளர்களுக்கான தொகுதிப்பங்கீடு குறித்த எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் மிகவும் தாமதமாக, தேர்தலுக்கு 20 நாட்களுக்கு முன்னர் தான் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

நான் தலைவர் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட உள்ளார் என்றால், அவர் சென்னையில் வேளச்சேரி போன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என்கிற எனது கருத்தை முன் வைத்தேன்.

தலைவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட விருப்பப்பட்டால் மட்டுமே கோவையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் தெளிவாக உணர்த்தினேன்.

ஆனால் இவை எல்லாவற்றுக்கு பிறகும், இறுதியாக தேர்தலுக்கு நான்கு வாரம் மட்டும் உள்ள நிலையில் தலைவர், கோவை தெற்குத் தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.

பெரும்பான்மையான கட்சியினரிடம் இருந்தும் உங்களைத் தனிமைப்படுத்தி வைத்திருக்கும் உங்கள் ஆலோசகர்கள், கூட்டணியில் குழப்பம், தொகுதி பங்கீட்டில் குழப்பம், வேட்பாளர் தேர்வில் குழப்பம், கட்சியின் தேர்தல் அறிக்கையில் குழப்பம் என்று தொடர் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சங்க்யா சொல்யூசன்சின் தலைவர் மற்றும் தலைவரின் ஆலோசகரின் கையில், தலைவர் அவரது தொகுதிக்கான தேர்தல் பிரசாரப் பணியினையும் இதர தேர்தல் பணிகளையும் ஒப்படைத்தால் இறுதியில் இங்கும் நமது வெற்றி வாய்ப்பு குறைந்துவிடும் என்பதை தலைவரிடம் எடுத்துச் சொன்னேன்.

கோவை தொகுதி எனக்கு பரிச்சயமான தொகுதி என்பதால், அதில் என் தலைவருக்காக நான் சிரமேற்கொண்டு பணிபுரிவேன் என்று எடுத்துச் சொல்லப்பட்டும் எனது கருத்து கேட்கப்படவில்லை.

கட்சியின் இத்தனை பெரிய தோல்விக்கு பிறகும், தனது தோல்விக்குப் பின்னரும் தலைவர் தனது அணுகுமுறையில் இருந்து மாறுபட்டு செயல்படுவதாக எனக்கு தெரியவில்லை, மாறிவிடுவார் என்கிற நம்பிக்கையும் இல்லை.

இந்த சூழல்தான் என்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவது என்கிற கடினமான முடிவினை மிகக் கவனமாக எடுத்து வைத்து இருக்கின்றது.

ஏனெனில் ஒரு அரசியல் கட்சி என்பது சாமானியர்களின் கட்சியாகவும், ஜனநாயக முறைப்படியும், எதிர்க்கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் அமைந்திட வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்ட நான், நமது கட்சியில் இருந்து விலகிச் செல்லும் இந்த நேரத்தில் கூட, தலைவர் கமல்ஹாசன் தனது இந்த தன்னிச்சையாக முடிவெடுக்கும் போக்கினையும், சங்க்யா சொல்யூசன்ஸ் என்கிற நிறுவனத்தையும், அதன் ஆலோசகர்களையும் மட்டும் நம்ப, கட்சி உறுப்பினர் அனைவரின் மீதும் களங்கத்தை ஏற்படுத்தி, பலிகடாவாக ஆக்கும் அணுகுமுறையில் இருந்து தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையுடன் தான் செல்கிறேன்.

அரசியல் எனும் விதையை எனக்குள் விதைத்த தலைவர் கமல்ஹாசனுக்கு என் மன மார்ந்த நன்றிகள்.

மக்கள் சேவையை எங்கிருந்து செய்தாலும் காந்தியார் சொன்னது போல், ‘‘நீங்கள் பார்க்க விரும்பும் மாற்றமாக இருங்கள்’’ என்பதற்கேற்ப சிறப்பாகவும் அறத்துடனும் செயல்படுவேன் என்ற உறுதியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விடைபெறுகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News