செய்திகள்
மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மின்சார ரெயிலில் பயணம்

அரசு, தனியார் ஊழியர்கள் மின்சார ரெயிலில் பயணம்

Published On 2021-05-06 09:00 GMT   |   Update On 2021-05-06 09:00 GMT
முன்களப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அரசுத்துறை பணியாளர்கள் தவிர யாரையும் ரெயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை.
சென்னை:

சென்னையில் மின்சார ரெயில் சேவை 50 சதவீத பயணிகளுடன் இன்று இயக்கப்பட்டது. ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டன.

பொதுமக்களுக்கு பயணம் செய்ய அனுமதி இல்லாததால் பணிபுரிவோர் மட்டுமே சென்றனர். இதனால் ரெயில்களில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், சென்னை ஐகோர்ட்டு ஊழியர்கள், வக்கீல்கள், துறைமுகம் ஊழியர்கள், அரசு, தனியார், கூட்டுறவு வங்கிகளில் பணிபுரிவோர், தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள், ரெயில்வே ஊழியர்கள் பயணம் செய்தனர்.

இவர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மற்றும் துறையின் மூலம் பெறப்பட்ட கடிதத்தினை காண்பித்து டிக்கெட் பெற்று பயணம் செய்தனர். அலுவலக நேரமான காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் அதிக சேவைகள் இயக்கப்பட்டது.



மற்ற நேரங்களில் குறைந்த அளவில் ரெயில்கள் இயக்கப்பட்டன. சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, மூர்மார்க்கெட்- அரக்கோணம், மூர்மார்க்கெட்- கும்மிடிப்பூண்டி, கடற்கரை-வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன.

முன்களப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அரசுத்துறை பணியாளர்கள் தவிர யாரையும் ரெயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை.

இதே போல மெட்ரோ ரெயிலும் குறைந்த அளவில் இயக்கப்பட்டன. சென்ட்ரல்-ஆலந்தூர், சென்ட்ரல்-விமான நிலையம், விம்கோநகர்- விமான நிலையம் ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டது.

பயணிகள் கட்டுப்பாடுகளுடன் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News