செய்திகள்
கோப்புப்படம்

முழு ஊரடங்கு : கொரோனா தடுப்பூசி மையங்கள் வெறிச்சோடின

Published On 2021-04-25 19:35 GMT   |   Update On 2021-04-25 19:35 GMT
தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு காரணமாக கொரோனா தடுப்பூசி மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. ஒரே நாளில் 10,553 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
சென்னை:

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நேற்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த முழு ஊரடங்கு நேரத்திலும் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது.

ஆனால் நேற்று அதிகளவில் பொதுமக்கள் யாரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவில்லை. பெரும்பாலான தடுப்பூசி மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

சுகாதாரப்பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என படிப்படியாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதுவரை தமிழகத்தில் 52.5 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்தநிலையில் முழு ஊரடங்கான நேற்றும் தடுப்பூசி போட அனைத்தும் மையங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

ஆனால், முழு ஊரடங்கு நேரத்தில் வெளியே வந்தால், போலீசார் தடுப்பார்கள், அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும், எதுக்கு வம்பு, என்று பொதுமக்கள் பலர் தடுப்பூசி மையங்களுக்கு வருவதை தவிர்த்து விட்டனர். மேலும் பல தடுப்பூசி மையங்களில் வழக்கத்தை விட தடுப்பூசி போட்டுபவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்தது.

வழக்கமாக தமிழகத்தில் நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்த வகையில் நேற்று 10 ஆயிரம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர்.

அந்தவகையில் நேற்று தமிழகத்தில் 91-வது நாளாக 3,798 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 10 ஆயிரத்து 553 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

அந்தவகையில் நேற்று இணை நோயுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 5 ஆயிரத்து 478 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 ஆயிரத்து 798 முதியவர்களுக்கும், சுகாதாரப்பணியாளர்கள் 425 பேருக்கும், முன்கள பணியாளர்கள் 852 பேருக்கும் நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 52 லட்சத்து 62 ஆயிரத்து 373 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
Tags:    

Similar News