செய்திகள்
மின்கம்பத்தை சரிசெய்யும் பணியில் மின்ஊழியர்கள்

நெல்லை மாநகர பகுதியில் பலத்த மழை: மரங்கள்-மின்கம்பங்கள் சேதம்

Published On 2021-04-22 05:53 GMT   |   Update On 2021-04-22 05:53 GMT
மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி மற்றும் பெருமாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் 3 மணி முதல் இரவு 8 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடைமழை பரவலாக பெய்து வருகிறது. மாநகர பகுதியில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிப்பதும், மாலை நேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் கூடி மழை பெய்வதும் வழக்கமாகி உள்ளது.

வெப்பம் சலனம் காரணமாக பெய்து வரும் இந்த மழையால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பகல் நேரத்தில் சாலைகளில் நடமாட முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. நேற்றும் மாநகர பகுதியில் பகல் 2 மணி வரை வெயில் சுட்டெரித்தது.

தொடர்ந்து மாலை 3 மணி அளவில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது. மாநகர பகுதியில் என்.ஜி.ஓ.காலனி, ரெட்டியார்பட்டி, மேலப்பாளையம், பெருமாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

இடி-மின்னலுடன் பெய்த இந்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனை சிறுவர்களும், பெண்களும் மழையில் நனைந்தபடி எடுத்து சென்றனர்.

இந்த மழை காரணமாக மாநகர பகுதியில் மேலப்பாளையம், பெருமாள் புரம் சாலை, குலவணிகர்புரம் ரெயில்வே கேட் உள்ளிட்ட இடங்களில் நின்ற மரங்கள் முறிந்து விழுந்தது.

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடங்களுக்கு வந்த பாளை தீயணைப்பு துறையினர் முறிந்து விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.

ஒரு சில இடங்களில் மரம் முறிந்து விழுந்ததால் அதன் கீழ் நின்றிருந்த வாகனங்கள் சேதம் அடைந்தன. இந்த மழையால் மாலை 3 மணிக்கு மின்சாரம் தடை செய்யப்பட்டது.

மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி மற்றும் பெருமாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் 3 மணி முதல் இரவு 8 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனை மின் ஊழியர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

பெருமாள்புரத்தில் இரவு 10 மணி வரையிலும் முறிந்து விழுந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் பொக்லைன் எந்திரம் உதவியுடன் மின்ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த திடீர் மழையால் புதிய பேருந்து நிலையம் பகுதி, தருவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. அவை அனைத்தையும் மின்ஊழியர்கள் இரவு நேரத்திலும் பணியை துரிதமாக முடித்து மின்சப்ளை செய்வதற்கு பணியாற்றினர்.

ரெட்டியார்பட்டி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியிலும் மின் தடை ஏற்பட்டது. இதனால் கூடுதல் மின்ஊழியர்கள் அந்த பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு மின்வினியோகம் சீராக வழிவகை செய்தனர்.
Tags:    

Similar News