செய்திகள்
சென்னை தலைமை செயலகம்

சென்னை தலைமை செயலக வளாகத்தில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்

Published On 2021-04-22 04:28 GMT   |   Update On 2021-04-22 04:28 GMT
தலைமை செயலக வளாகத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்றால் ரூ.500 அபராதமும், முககவசம் அணியாமல் சென்றால் ரூ.200 அபராதமும் விதிக்கப்படும்.
சென்னை:

கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது இடங்களில் முககவசம் அணியாமல் சென்றால் ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

தற்போது சென்னை தலைமை செயலக வளாகத்தில் முககவசம் அணியாமல் யாரேனும் சென்றால் அவர்களுக்கும் ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது.

இதுகுறித்து பொதுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்படி முககவசம் அணியாமல் இருப்பது, பொது இடங்களில் எச்சில் துப்புவது ஆகியவை தவறான பழக்கவழக்கமாகும். இது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். பொது இடங்களில் அபராதம் விதிக்கப்படுவது போல் இனி தலைமை செயலகத்திலும் அபராதம் விதிக்கப்படும்.



அதன்படி தலைமை செயலக வளாகத்தில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்றால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும். முககவசம் அணியாமல் சென்றால் ரூ.200 அபராதமும் விதிக்கப்படும்.

அரசின் இந்த உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டும் என தலைமை செயலக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News