செய்திகள்
கொரோனா வைரஸ்

நெல்லை மாவட்டத்தில் மீண்டும் அதிகரிப்பு- தம்பதிகள் உள்பட மேலும் 92 பேருக்கு கொரோனா

Published On 2021-04-06 10:18 GMT   |   Update On 2021-04-06 10:18 GMT
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 32 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் அதிகரித்து 92 ஆக உயர்ந்தது.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 32 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் அதிகரித்து 92 ஆக உயர்ந்தது.

கடந்த 4 மாதங்களுக்கு பின்பு தற்போது தான் 90-ஐ கடந்துள்ளது. அதிகபட்சமாக மாநகர பகுதியில் 61 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.

மாநகர பகுதி மற்றும் பரப்பாடியில் 2 தம்பதிகளுக்கும், பாளையில் தாய்-மகனுக்கும், பேட்டையில் தாய் மற்றும் 2 மகன்களுக்கும், பாளையில் ஒரே வீட்டில் 3 பேருக்கும், மற்றொரு தெருவில் ஒரு வீட்டில் 2 பேரும் பாதிக்கப்பட்டனர்.

நெல்லை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 2 வாலிபர்களுக்கு தொற்று உறுதியானது. இதே போல் மாநகர பகுதியில் ஒரு முதியவர் மற்றும் மூதாட்டிக்கு இன்று மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் வசித்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 16,436 உயர்ந்துள்ளது.

நேற்று 12 பேர் குணமடைந்தனர். இதுவரை 15,743 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது 477 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Tags:    

Similar News