செய்திகள்
கைது

அவிநாசி அருகே அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது

Published On 2021-03-01 09:51 GMT   |   Update On 2021-03-01 09:51 GMT
அவிநாசி அருகே அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர்:

அவிநாசி அருகே ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி நியூ திருப்பூர் கருப்பராயன் தோட்டத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது29) மரம் அறுக்கும் தொழிலாளி. இவரது நண்பர்கள் அவிநாசி அருகே உள்ள பழங்கரை வேலூரைச் சேர்ந்த மகேந்திரன் (35) பனியன் தொழிலாளி. பழங்கரை நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த சந்துரு (30).

இவர்கள் 3 பேரும் நேற்று அதிகாலையிலேயே முயல் வேட்டையாடுவதற்காக நேதாஜி ஆயத்த ஆடை பின்புறம் உள்ள சொக்கன் குட்டை வனப்பகுதிக்கு நாட்டுத் துப்பாக்கியுடன் சென்றனர். இந்த ஏர்கன் கொண்ட நாட்டு துப்பாக்கியை சந்துரு கொண்டு வந்தார். பின்னர் வனப்பகுதியில் முயலை வேட்டையாடுவதற்காக சந்துரு நாட்டு துப்பாக்கியை மகேந்திரனிடம் கொடுத்தார். அவர் அதில் வெடி மருந்தை நிரப்பி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கியில் இருந்த குண்டு எதிரே நின்ற முருகேசனின் இடது தோள் பக்கத்தில் பாய்ந்தது. இதில் முருகேசன் பலத்தகாயம் அடைந்து அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். அதிர்ச்சி அடைந்த இருவரும் முருகேசனை அப்படி விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த சம்பவம் அறிந்ததும் அவரது உறவினர்கள் வனப்பகுதியில் குண்டு பாய்ந்து கிடந்த முருகேசனை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பெருமா நல்லூர் போலீசார் வேட்டைக்கு சென்ற 3 பேர் மீதும் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்தனர். பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முருகேசனை கைது செய்தனர். நண்பர் மகேந்திரனையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சந்துருவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News