search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முயல் வேட்டை"

    • வனபாதுகாப்பு படை அலுவலர் கிருஷ்ணகுமார், அய்யலூர் வனஅலுவலர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
    • வனவிலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வடமதுரை:

    வடமதுரை, அய்யலூரை சுற்றி ஏராளமான மலைகிராமங்கள் உள்ளன. இதில் மான், முயல், காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகளை வேட்டையாடுவதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் மோளப்பாடியூர் பகுதியில் வேட்டை நாய்களை வைத்து கும்பல் முயல்களை பிடித்து இறைச்சியை விற்பனை செய்து வருவதாக சென்னை வனப்பாதுகாப்பு படைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதனைதொடர்ந்து வனபாதுகாப்பு படை அலுவலர் கிருஷ்ணகுமார், அய்யலூர் வனஅலுவலர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அப்போது 7 பேர் முயல்வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது. முயல்வேட்டையாடிய முத்து, பழனியாண்டி, மணிகண்டன், கார்த்திகேயன், சுபாஷ், மலையாளம், லோகமணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். இதில் முத்துக்கு ரூ.50ஆயிரமும், மற்றவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.2லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    தொடர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இடையபட்டி கண்மாய் பகுதிக்குள் சென்ற ஒருசில நிமிடங்களில் பயங்கர அலறல் சத்தம் கேட்டது.
    • முயல் வேட்டைக்கு சென்று பலியான அனுமந்த் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வந்தார்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள நாகையாபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது அலப்பளாச்சேரி கிராமம். இதனையொட்டி இடையபட்டி கண்மாய் பகுதியில் ஏராளமான முயல்கள் வளைதோண்டி அதில் வசித்து வருகின்றன. இதனை அப்பகுதியை சேர்ந்தவர்கள் அடிக்கடி வேட்டைக்கு சென்று பிடித்து வருவது வாடிக்கையாகும்.

    இந்த நிலையில் அலப்பளாச்சேரியை சேர்ந்த சிவராமன் மகன் அனுமந்த் (வயது 17), அவரது நண்பர்கள் இடையபட்டியை சேர்ந்த நாகராஜ் மகன் கருப்பசாமி (21), மணி மகன் மனோஜ்குமார் (24) மற்றும் சிலர் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் முயல் வேட்டைக்காக புறப்பட்டு சென்றனர். கடந்த சில நாட்களாக மாலை வேளைகளில் பெய்துவரும் பலத்த மழையால் கண்மாய்க்குள் சேறும், சகதியும் நிறைந்து காணப்படுகிறது.

    இதற்கிடையே அவர்கள் இடையபட்டி கண்மாய் பகுதிக்குள் சென்ற ஒருசில நிமிடங்களில் பயங்கர அலறல் சத்தம் கேட்டது. இதைக்கேட்ட ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பதறியடித்துக்கொண்டு எழுந்தனர். பின்னர் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினர். அப்போது கண்மாய்க்குள் அனுமந்த், கருப்பசாமி ஆகியோர் மூச்சு, பேச்சின்றியும், மனோஜ்குமார் காயங்களுடன் முனகியவாறும் கிடந்தனர்.

    உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த கிராம மக்கள் 3 பேரையும் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அனுமந்த், கருப்பசாமி ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மனோஜ்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முயல் வேட்டைக்கு சென்று பலியான அனுமந்த் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வந்தார். அதேபோல் இறந்த கருப்பசாமிக்கு திருமணமாகி சோலையம்மாள் என்ற மனைவியும், 6 மாதத்தில் ஒரு கைக்குழந்தையும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முயல் வேட்டைக்கு சென்றவர்கள் மழை காரணமாக மின்சாரம் பாய்ந்து பலியானார்களா? அல்லது ஏற்கனவே வேட்டைக்காக யாராவது வைத்திருந்த மின் வேலியில் சிக்கி இறந்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் இரவோடு இரவாக மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் அங்கு இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது.

    • 50 குழுக்களாக பிரிந்து சென்ற வனத்துறையினர் அந்த கும்பலை கண்காணித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
    • வேட்டையாடியவர்கள் மீது அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

    ஈரோடு:

    ஈரோடு வனச்சரகத்துக்கு உட்பட்ட பெருந்துறை அருகே உள்ள தோரணாவி, தொட்டிபாளையம் கிராமத்தில் உள்ள பட்டா நிலங்களில் கும்பல் கும்பலாக முயல்கள் வேட்டுயாடுவதாக, தமிழ்நாடு வனம் மற்றும் வன உரியின கட்டுப்பாடு கோவை மண்டல அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பாதுகாவலருக்கு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட வனப்பாதுகாப்பு படையினர், ஈரோடு வனச்சரக குழுக்கள், ஈரோடு வனவியல் விரிவாக்க கோட்ட குழுக்கள் உள்பட பல்வேறு வனச்சரக குழுவினர் தொட்டி பாளையம் கிராமத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது ஒரு வாட்ஸ்-அப் செயலி மூலம் குழு அமைத்து முயல் வேட்டையாடுவது வனத்துறையினருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து 50 குழுக்களாக பிரிந்து சென்ற வனத்துறையினர் அந்த கும்பலை கண்காணித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பட்டா நிலங்களில் கும்பல் கும்பலாக ஏராளமானோர் காட்டு முயலை வேட்டையாடிக் கொண்டிருந்ததையடுத்து வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து மொத்தம் 107 பேரை பிடித்தனர். அவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் அவர்கள் வேட்டையாடி வைத்திருந்த 5 முயல்கள் மற்றும் வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கம்புகள், ஏராளமான செல்போன்களையும் வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிடிப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவில் திருவிழாவையொட்டி குறிப்பிட்ட சமூகத்தினர் காட்டு முயலை வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டிருப்பதாகவும், அதன்படி இந்தாண்டு திருவிழாவை யொட்டி வேட்டையாட வந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது:-

    பொதுவாக வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவது மிகப்பெரிய குற்றமாகும். முயல் வேட்டையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இவர்கள் வனப்பகுதியில் வேட்டையாடவில்லை. பட்டா நிலங்களில் தான் வேட்டையாடி உள்ளனர். இருந்தாலும் இதுவும் சட்டப்படி தவறுதான். எனவே 107 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் மீது அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    • கன்னிமாா், கருப்பராயன், வேட்டைக்காரன் முனியப்பன் சுவாமி கோயில் பொங்கல் திருவிழாக்கள் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றன.
    • வேட்டைக்கு செல்பவா்களுக்கு 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றனா்.

    அவிநாசி :

    அவிநாசி வட்டம், ஈட்டிவீரம்பாளையம் புதுக்காலனி பகுதியில் உள்ள கன்னிமாா், கருப்பராயன், வேட்டைக்காரன் முனியப்பன் சுவாமி கோயில் பொங்கல் திருவிழாக்கள் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றன. திருவிழாவின் நிறைவாக முயல் வேட்டைக்கு செல்வதை இப்பகுதி மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனா். இந்நிலையில், வியாழக்கிழமை வழக்கம்போல் 50க்கும் மேற்பட்டவா்கள் முயல் வேட்டைக்கு புறப்பட்டனா்.

    இதையடுத்து தகவல் அறிந்து வந்த வன அலுவலா் ம.சுரேஷ் கிருஷ்ணன் தலைமையிலான அலுவலா்கள் முயல் வேட்டைக்கு புறப்பட்ட மக்களை தடுத்து நிறுத்தினா். மேலும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி முயல்களை வேட்டையாடுவது குற்றம் என்றும், வேட்டைக்கு செல்பவா்களுக்கு 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்றனா். 

    • 5 கீரிப்பிள்ளைகள், 30 முயல்கள், கவுதாரிகள் ஆகியவற்றை வேட்டையாடி பிடித்த கிராமத்தினர் லாரிகளில் ஊருக்கு புறப்பட்டனர்.
    • பிடிபட்ட அனைவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    விருதுநகர்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கருத்தலக்கம்பட்டி, புதூர் கிராமங்களில் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி பாரிவேட்டை நடைபெறும்.

    அதன்படி சம்பவத்தன்று மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த 120 பேர் பாரி வேட்டைக்கு புறப்பட்டனர். லாரி-கார்களில் சென்ற அவர்கள், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வனப்பகுதியில் 5 வேட்டை நாய்களுடன் வேட்டையாடினர்.

    இதில் 5 கீரிப்பிள்ளைகள், 30 முயல்கள், கவுதாரிகள் ஆகியவற்றை வேட்டையாடி பிடித்த கிராமத்தினர் பின்னர் லாரிகளில் ஊருக்கு புறப்பட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு லாரிகளில் சென்ற 120 பேரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

    அவர்களிடமிருந்து வேட்டையாடப்பட்ட கீரிகள், முயல்கள் மற்றும் வேட்டையாட பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதையடுத்து பிடிபட்ட அனைவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    வனச்சரக அலுவலர் கார்த்திக் தலைமையிலான அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கோவில் திருவிழாவுக்காக விலங்குகளை வேட்டையாடியது தெரிய வந்தது. இதையடுத்து கருத்தலக்கம்பட்டியை சேர்ந்த தங்கராஜ், செல்வம், நடுவிலான், அழகர்சாமி, சின்னப்பொண்ணு, நாகராஜ் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ×