செய்திகள்
திமுக

திமுக வேட்பாளர் தேர்வு முறைகளில் திடீர் மாற்றம்- நிபுணர் குழு பரிந்துரைக்க வாய்ப்பு

Published On 2021-03-01 08:20 GMT   |   Update On 2021-03-01 08:20 GMT
திமுக நிபுணர் குழு ஆய்வு செய்து பரிந்துரை செய்பவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் தேர்தல் நடத்தப்படும் ஒவ்வொரு முறையும் தி.மு.க. சார்பில் நேர்காணல் நடத்தப்பட்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த தடவையும் நாளை மறுநாள் முதல் 6-ந்தேதி வரை தி.மு.க. சார்பில் விருப்ப மனு கொடுத்தவர்கள் நேரில் அழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட உள்ளனர்.

வழக்கமாக தி.மு.க.வில் முக்கிய தொகுதிகளில் தொடர்ந்து பிரபலங்கள் போட்டியிட்டு வருகிறார்கள். சில தொகுதிகளில் மாவட்ட செயலாளர்கள் பரிந்துரை செய்பவர்களுக்கு தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைப்பதுண்டு.

இந்த முறை இத்தகைய பரிந்துரை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதற்கு பதில் தி.மு.க. நிபுணர் குழு ஆய்வு செய்து பரிந்துரை செய்பவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க.வின் தேர்தல் திட்டங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பணிகளுக்கு பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் வகுத்து கொடுத்துள்ள திட்டப்படி தி.மு.க.வின் தேர்தல் பணிகள் நடந்து வருகின்றன.

ஐபேக் நிறுவனம் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் ஆய்வு செய்து ஒரு முக்கிய அம்சத்தை கண்டுபிடித்தது. அதாவது தி.மு.க. தொண்டர்களில் பலரும் தங்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்பதில் அதிருப்தி அடைந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதுபற்றி ஐபேக் நிறுவனம் தி.மு.க. தலைமைக்கு அறிவுறுத்தியது. மேலும் புதிய பொறுப்புகளை உருவாக்கி அடிமட்ட தொண்டர்களுக்கு வழங்க கேட்டுக்கொண்டது.

அதன்படி மாவட்ட கிளைகள் பிரிக்கப்பட்டு புதிய பதவிகள் நூற்றுக்கணக்கில் உருவாக்கப்பட்டன. அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களும் அந்த பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டனர். இதனால் தி.மு.க. கிளை கழகங்களில் நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

அவர்களிடம் செல்வாக்கு பெற்ற ஒருவரை வேட்பாளராக களம் இறக்க ஐபேக் நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. எனவே இந்த தடவை தி.மு.க.வில் கணிசமான அளவுக்கு புதுமுக வேட்பாளர்கள் களத்துக்கு வருவார்கள் என்று தெரிகிறது.

Tags:    

Similar News