தலைவாசல் அருகே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தலைவாசல் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பதிவு: பிப்ரவரி 28, 2021 19:06
தற்கொலை
தலைவாசல்:
தலைவாசல் அருகே நாவலூர் வடக்கு காட்டுப்பகுதியில் வசித்து வருபவர் பூபதி, விவசாயி. இவருடைய மனைவி நிவேதா (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு மித்ரகாசன் என்ற 3 வயது மகன் உள்ளான். கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒரு மாதமாக நிவேதா தலைவாசல் அருகே வடகரை கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் அவரை நாவலூருக்கு அவரது கணவர் அழைத்து வந்துள்ளார். இதையடுத்து நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது, நிவேதா வீட்டிற்குள் மின் விசிறி கொக்கியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே வெளியே சென்ற குடும்பத்தினர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது நிவேதா தூக்குப்போட்டு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கணவர் பூபதி வீரகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து உள்ளார். மேலும் நிவேதாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் நிவேதாவின் சாவு குறித்து ஆத்தூர் உதவி கலெக்டர் துரை விசாரணை செய்து வருகிறார்.