செய்திகள்
ஜெயலலிதா மெழுகு சிலை

ஜெயலலிதா மெழுகு சிலையுடன் அருங்காட்சியகம்- எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

Published On 2021-02-24 06:33 GMT   |   Update On 2021-02-24 06:33 GMT
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுசார் பூங்காவையும், அருங்காட்சியகத்தையும் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளான இன்று திறந்து வைத்தார்.

சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி வளாகத்தில் உள்ளது.

பீனிக்ஸ் பறவை வடிவத்தில் அழகிய கட்டமைப்புடன் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தை கடந்த மாதம் 27-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

50,422 சதுரடி பரப்பளவில் ரூ.80 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த நினைவிடம் 15 மீட்டர் உயரம், 30.5 மீட்டர் நீளம், 43 மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளது.

இந்த நினைவிட வளாகத்தில் அறிவுசார் பூங்கா ஒரு புறமும், மற்றொரு புறம் டிஜிட்டல் அருங்காட்சியகமும் ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

அதில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, அவர் செய்த சாதனைகள், மக்களுக்கு செய்த சேவைகள், வீடியோ மற்றும் ஆடியோ காட்சி பிரிவு, ஜெயலலிதாவின் உரைகள், சிறுகதைகள், புகைப்படங்கள் அமைக்கப்பட்டு வந்தன.

இந்த பணிக்காக ஜெயலலிதா நினைவிடம் கடந்த 27-ந் தேதியில் இருந்து மூடப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா பணிகள் முழுமையாக நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று திறப்பு விழா நடைபெற்றது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுசார் பூங்காவையும், அருங்காட்சியகத்தையும் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளான இன்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், செய்தித்துறை இயக்குனர் பாஸ்கர பாண்டியன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த அறிவுசார் பூங்காவில் ஜெயலலிதாவின் 6 அடி உயர மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிடம் பள்ளி மாணவி ஒருவர் லேப்-டாப் பெறுவது போன்று மெழுகு சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர அருங்காட்சியகத்தில் 8 அடி உயர மெழுகு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News