செய்திகள்
விபத்தில் வேனும், காரும் சேதமடைந்து இருப்பதை படத்தில் காணலாம். பலியான சித்ரா

வெள்ளகோவில் அருகே கார்-வேன் மோதல் : பெண் பலி - 6 பேர் படுகாயம்

Published On 2021-02-17 22:43 GMT   |   Update On 2021-02-17 22:43 GMT
வெள்ளகோவில் அருகே கார்-வேன் மோதிய விபத்தில் பெண் பலியானார். இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
வெள்ளகோவில்:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பேய் குளத்தை சேர்ந்தவர் பொன்னுத்துரை (வயது 57). இவருடைய மனைவி சித்ரா (55). இவர்களது மகன் சந்திரபோஸ் (29). பொன்னுத்துரை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள நத்தக்காடையூர் வந்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் அந்த பகுதியில் மளிகை கடையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் பொன்னுத்துரை தனது குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று வர முடிவு செய்தார்.

அதன்படி பொன்னுத்துரை, இவரது மனைவி சித்ரா (55), இவர்களது மகன் சந்திரபோஸ் (29), பொன்னுத்துரையின் அண்ணன் வெள்ளத்துரை (60), வெள்ளதுரையின் மனைவி கற்பகம் (55) ஆகிய 5 பேரும் ஒரு காரில் திருச்செந்தூர் சென்றனர்.

அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு நத்தக்காடையூர் திரும்பினர். காரை சந்திரபோஸ் ஓட்டினார். இவர்களுடைய கார், திருச்சி -கோவை ரோட்டில் வெள்ளகோவில் அருகே குருக்கத்தியில் வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிரே கோவையில் இருந்து திருச்சி நோக்கி வேன் ஒன்று சென்றது. கண் இமைக்கும் நேரத்தில் காரும் வேனும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

அதே போல் வேனை ஓட்டி சென்ற திருச்சி, மணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாவடியன் (55), அதே வேனில் வந்த அதே பகுதியை சேர்ந்த சங்கர் (29) ஆகியோரும் காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்த அனைவரையும் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு சித்ராவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து காயம் அடைந்த 6 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News