செய்திகள்
பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீதை விவசாயிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார்

பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீதை விவசாயிகளுக்கு வழங்கினார் முதலமைச்சர்

Published On 2021-02-13 05:55 GMT   |   Update On 2021-02-13 09:27 GMT
பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீதை விவசாயிகளிடம் வழங்கி திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை:

விவசாயிகள், பல்வேறு விவசாய சங்கங்கள், சாகுபடி பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பெருத்த சேதத்தை கருத்தில் கொண்டு, நிலுவையில் உள்ள பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து முதல்-அமைச்சர் கடந்த 5-ந்தேதி அன்று சட்டமன்ற பேரவை விதி எண். 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பை வெளியிட்டார்.

அதில் தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்புக்கு இணங்க கடந்த 8-ந்தேதி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் அரசாணைகள் வெளியிடப்பட்டன.

கூட்டுறவு வங்கிகளின் பயிர்க்கடன் பெற்று ஜனவரி 31-ந்தேதி வரை நிலுவையில் உள்ள 16,43,347 விவசாயிகளின் 12,110.74 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 9 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்ததற்கான ரசீது மற்றும் சான்றிதழ்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமை செயலாளர் தயானந்த் கட்டாரியா, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணியன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News