செய்திகள்
கள்ளக்குறிச்சியில் கலெக்டர் கிரண்குராலா தலைமையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 271 மனுக்கள் பெறப்பட்டன

Published On 2021-02-09 11:49 GMT   |   Update On 2021-02-09 11:49 GMT
கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 271 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 10 மாதங்களுக்கு பிறகு கலெக்டர் கிரண்குராலா பொதுமக்களை நேரடியாக சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கிரண்குராலா தலைமை தாங்கினார். சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்கொழுந்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களாக காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வந்தது. அரசு உத்தரவை தொடர்ந்து நேற்று 2-வது வாரமாக நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கலெக்டர் கிரண்குராலாவை நேரடியாக சந்தித்து தங்களின் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாற்றம் செய்தல், கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 271 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் கிரண்குராலா மனுக்கள் தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். மேலும் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மற்றும் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி அதன் மீது உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையும் வகையில் பணியாற்ற வேண்டும் என்றார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் ரெத்தினமாலா மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News