செய்திகள்
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனாவில் இருந்து குணமடைந்து மறுபிறவி எடுத்துள்ளார் அமைச்சர் காமராஜ் - விஜயபாஸ்கர் பேட்டி

Published On 2021-02-03 13:03 GMT   |   Update On 2021-02-03 13:03 GMT
உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து மறுபிறவி எடுத்துள்ளார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கடந்த சில வாரங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவருடைய உடல் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் அவ்வப்போது தெரிவித்தனர்

இதனிடையே அமைச்சர் காமராஜரின் உடல்நிலை குறித்து அவ்வப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கேட்டறிந்தனர்.

இதையடுத்து, அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்திருப்பதாக தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை தற்போது அளிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் காமராஜ் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் என்றும் தெரிவித்தது. இந்த நிலையில் இன்று அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் செய்தியாளர்கள் சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

"உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து மறுபிறவி எடுத்துள்ளார் . அமைச்சர் முழு அளவில் குணமாகிவிட்டார். இன்று மாலை (அல்லது) நாளை காலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். ஒரு மாத தொடர் சிகிச்சைக்குப் பின் அமைச்சர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 

அமைச்சருக்கு ஆரம்பத்தில் 95% அளவுக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தது. 95% அளவுக்கு நுரையீரல் பாதிக்கப்பட்ட அவர் மீண்டு வந்தது மருத்துவ வரலாற்றில் ஒரு அதிசயம். அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் உதவியுடன் அமைச்சர் குணமடைந்துள்ளார்".

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
Tags:    

Similar News