செய்திகள்
முதலமைச்சர் பழனிசாமி

முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது

Published On 2021-01-28 21:09 GMT   |   Update On 2021-01-28 21:09 GMT
முதலமைச்சர் பழனிசாமி தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
சென்னை:

தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 24-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதற்கிடையே, இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் பிப்ரவரி 2-ம் தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்க இருக்கிறது. இந்த கூட்டத் தொடர் 3 அல்லது 4 நாள் நடைபெறும் என தெரிகிறது.

இந்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை 4.30 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில், வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட இருக்கும் புதிய சட்ட மசோதாக்கள் குறித்தும், தொழில் நிறுவனங்களுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு விரைவில் அனுமதி அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட இருக்கிறது. இதேபோல், பிப்ரவரி மாத இறுதியில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலை கணக்கில் கொண்டு இந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிய திட்டங்கள் அறிவிக்கவும் அ.தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது. எனவே, தமிழக மக்களுக்கு என்னென்ன புதிய அறிவிப்புகள் வெளியிடலாம் என்பது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
Tags:    

Similar News