செய்திகள்
பழனியில் எல் முருகன், சி.டி.ரவி ஆகியோர் மயில் காவடி எடுத்து ஆடி வந்தபோது எடுத்த படம்.

மு.க.ஸ்டாலின் வேல் எடுத்து பிரசாரம் செய்வது ஏமாற்று நாடகம்- எல் முருகன் பேட்டி

Published On 2021-01-28 11:03 GMT   |   Update On 2021-01-28 11:03 GMT
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேல் எடுத்து பிரசாரம் செய்வது மக்களை ஏமாற்றுவதற்கான நாடகம் என்று பழனியில் மயில்காவடி எடுத்து ஆடிய தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் கூறினார்.
பழனி:

தைப்பூச திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன், தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் சி.டி.ரவி, துணைத்தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேற்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தபின், முருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கந்தசஷ்டியை இழிவுபடுத்தியவர்களுக்கு பாடம் புகட்டவே வேல் யாத்திரை மேற்கொண்டோம். இந்த யாத்திரை வெற்றி பெற்றது. இதற்காக காவடி எடுத்து வழிபட பழனிக்கு வந்தோம். நாங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று தைப்பூசத்துக்கு விடுமுறை அளித்துள்ள தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சருக்கும் நன்றி.

கடவுளே இல்லை, பா.ஜ.க.வின் வேல்யாத்திரை அரசியல் என்று சொன்ன தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போது இந்து மக்களுக்கு நாங்கள் துணையாக இருக்கிறோம் என்று கூறி கையில் வேல் எடுத்து பிரசாரம் செய்துள்ளார். இது தேர்தலுக்காக, தமிழக மக்களை ஏமாற்றும் நாடகம். கருப்பர் கூட்டத்தை சேர்ந்த செந்தில்வாசன் கந்தசஷ்டியை இழிவுபடுத்தியபோது தி.மு.க. வினர் யாரும் கண்டிக்கவில்லை. தற்போது முருகப்பெருமான் அவர்கள் கையில் வேலை கொடுத்துள்ளார். இனியாவது இந்து கலாசாரத்தை அவர்கள் இழிவுபடுத்த கூடாது.

கொடைக்கானல் பா.ஜ.க. பிரசார கூட்டத்தில் நடந்த வன்முறை சம்பவம் கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமானவர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும். டெல்லி போராட்டத்தில் நடந்த கலவரம் திட்டமிடப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார். 

அப்போது. பழனி தொகுதியை அ.தி.மு.க.விடம் பா.ஜ.க. கேட்டு வாங்குமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முருகன், தேர்தல் நேரத்தில் சொல்வோம் என்றார்.

பின்னர் முருகன், சி.டி.ரவி. மற்றும் பா.ஜ.க.வினர் மயில்காவடி எடுத்து ஆடியபடி பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து திருஆவினன்குடி கோவிலுக்கு நடந்தே வந்தனர். பின்னர் அங்கு அவர்கள் காவடியை செலுத்தி வழிபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News