செய்திகள்
கோப்புபடம்

தலைவாசல் அருகே அடமானம் வைத்த நிலம் அபகரிப்பு: 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

Published On 2021-01-26 08:44 GMT   |   Update On 2021-01-26 08:44 GMT
தலைவாசல் அருகே அடமானம் வைத்த நிலத்தை அபகரித்தது தொடர்பாக 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தலைவாசல்:

தலைவாசல் அருகே வீரகனூர் சந்ைதப்பேட்டையை சேர்ந்தவர் பெரியசாமி. (வயது 55). இவரது மனைவி மாதேஸ்வரி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். பெரியசாமி தனக்கு சொந்தமான நிலத்தை 2014-ம் ஆண்டு வீரகனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் கணிதஆசிரியர் நவீன் என்பவரிடம் அடமானம் வைத்து ரூ.17 லட்சம் கடன் பெற்று இருந்தார்.

இந்த நிலையில் ஆசிரியர் நவீன், பெரியசாமி அடமானம் வைத்த நிலத்தை, திட்டச்சேரி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர், இவரது மனைவியும், வீரகனூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியையுமான தமிழ்ச்செல்வி ஆகியோரிடம் ரூ.30 லட்சத்துக்கு விற்றதாக கூறப்படுகிறது.

அடமானம் வைத்த நிலத்தை பெரியசாமி, திருப்பி கேட்ட போது அவர்கள் தர மறுத்து விட்டனர். இதனால் மனமுடைந்த பெரியசாமியின் மனைவி மாதேஸ்வரி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் கடந்த 21-ந் தேதி முடிதிருத்தும் தொழிலாளி பெரியசாமியும் மனம் உடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பெரியசாமி மகன் மனோகரன், தனது தாய், தந்தை தற்கொலைக்கு காரணமான ஆசிரியர்கள் நவீன், தமிழ்செல்வி, சங்கர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீரகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்ேபரில் தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர்கள் நவீன், தமிழ்ச்செல்வி, சங்கர் ஆகியோர் மீது வீரகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை தமிழ்ச்செல்வி, வீரகனூர்அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் நவீன், திட்டச்சேரி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சங்கர் ஆகியோரை கல்வி அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Tags:    

Similar News