செய்திகள்
குடவாசலில், பள்ளத்தில் கவிழ்ந்த காரை படத்தில் காணலாம்.

பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் தலைமை ஆசிரியர் உள்பட 6 பேர் படுகாயம்

Published On 2021-01-26 07:07 GMT   |   Update On 2021-01-26 07:07 GMT
குடவாசலில், பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் தலைமை ஆசிரியர் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குடவாசல்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலம் இரண்டாம் சேத்தியை சேர்ந்தவர் ரவி(வயது 50). இவர், சிறுதலைக்காடு அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் புதிதாக வீடு கட்ட உள்ளார்.

இதற்காக பூமி பூஜை போடுவதற்காக நேற்று இவர் தனது குடும்பத்தினருடன் வேதாரண்யத்தில் இருந்து தனது காரில் திருநாகேஸ்வரம் சென்றார். காரை அவரே ஒட்டிச்சென்றார்.

அவர்கள் வந்த கார், குடவாசல் அரசு ஆஸ்பத்திரி அருகே வந்தபோது கும்பகோணத்தில் வனத்துறையில் பணிபுரிந்து வரும் முருகையன் மகன் தினேஷ்குமார்(32), தனது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்ததாக கூறப்படுகிறது.

தினேஷ்குமார் வேகமாக வருவதை கண்டு ரவி தனது காரை திடீரென நிறுத்தி உள்ளார். அப்போது கார், நிலைதடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ரவி, ரவியின் மனைவி கவிதா(45), மகள் நிவேதா(17), மாமியார் கிருஷ்ணவேணி(60), மாமனார் கணேசன் (70) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த தினேஷ்குமாருக்கும் கால் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக 6 பேரையும் ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

இதுகுறித்து குடவாசல் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News