செய்திகள்
கைது

தஞ்சை அருகே ஊராட்சி மன்ற தலைவருக்கு கத்திக்குத்து- வாலிபர் கைது

Published On 2021-01-18 13:00 GMT   |   Update On 2021-01-18 13:00 GMT
தஞ்சை அருகே இருதரப்பினரிடையே நடந்த மோதலில் ஊராட்சி மன்ற தலைவரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளப்பெரம்பூர்:

தஞ்சை அருகே உள்ள சீராளூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 25). சீராளூர் தெற்குத்தெருவை சேர்ந்தவர் வினோத் (33). இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்காக வினோத் சீராளூருக்கு வந்திருந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வினோத் தனது காரில் சீராளூரில் சென்ற போது கார் பழுதாகி நின்றது. அப்போது அந்த பகுதியில் பண்டிகைக்காக அலங்கரிக்கப்பட்ட மாடுகளுடன் சிலர் வந்துள்ளனர். விளையாட்டு போட்டிகளும் நடைபெற்று வந்துள்ளது. அப்போது அங்கிருந்த வினோத், பிரசாந்த் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சீராளூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் அங்கு வந்துள்ளார்.

இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், பிரசாந்த் ஆகியோரை எதிர்தரப்பினர் கத்தியால் குத்தினர். மற்றொரு தரப்பினர் வினோத்தின் தாய் செல்வியை தாக்கினர். இதில் காயமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், பிரசாந்த் மற்றும் செல்வி ஆகிய 3 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து பிரசாந்த், வினோத் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் இருதரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வினோத்தை கைது செய்தனர். இதில் தொடர்புடையவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
Tags:    

Similar News