செய்திகள்
அரசு பள்ளி மாணவிகள்

தமிழகத்தில் ஜனவரி 19 முதல் பள்ளிகள் திறப்பு

Published On 2021-01-12 03:54 GMT   |   Update On 2021-01-12 04:52 GMT
தமிழகத்தில் ஜனவரி 19ம் தேதி முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை:

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த 9 மாதமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை.

மாணவர்கள் வீடுகளில் இருந்து ஆன்லைன் வழியாக படித்து வருகிறார்கள். இதனால் பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் மன உளைச்சலுக்கும், அழுத்தத்திற்கும் ஆளாகி வருகின்றனர். ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருவதால் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தப்படுகிறது.

மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி திறப்பு வைக்கப்பட்ட போதிலும் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பது பற்றி தமிழகம் முழுவதும் கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை கருத்து கேட்கப்பட்டது. பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் விருப்பத்தை எழுத்து மூலம் தெரிவித்தனர்.

பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுவதாகவும் அதனால் உரிய பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி பள்ளிகளை திறக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து இருந்தனர். பள்ளிக் கல்வித்துறை மூலம் பெறப்பட்ட கருத்துக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என அனைத்து பள்ளி பெற்றோர்களின் கருத்துக்களின் அடிப்படையில் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. 95 சதவீத பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:

* பள்ளிகளை திறக்க பெற்றோர் இசைவு தெரிவித்ததாக 95% பள்ளிகள் அறிக்கை அளித்துள்ளன. இதையடுத்து தமிழகத்தில் ஜனவரி 19 முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும்.

* பெற்றோரிடம் கேட்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் வரும் 19ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

* ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்பட அனுமதி.

* பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

* மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின், துத்தநாக மாத்திரைகள் வழங்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* கல்வி பயில்வதில் மாணாக்கர்களின் வருங்கால நலனை கருத்தில்கொண்டே பள்ளிகள் திறக்கப்படுகிறது.

அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பள்ளிகள் செயல்பட அனுமதியளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News