செய்திகள்
மான்களால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களை விவசாயி காண்பித்தபோது எடுத்தபடம்.

விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் மான்கள்- விவசாயிகள் வேதனை

Published On 2021-01-02 08:22 GMT   |   Update On 2021-01-02 08:22 GMT
கயத்தாறு அருகே விவசாய நிலத்தில் மான்கள் கூட்டமாக புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கயத்தாறு:

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவைச் சேர்ந்த அய்யனார் ஊத்து கிராமத்தில் உள்ள விவசாயிகள் பழனி, பேச்சிமுத்து ஆகியோர் தலா 20 ஏக்கருக்கு மேல் உளுந்து, பாசிப்பயறு விதைத்துள்ளனர். இவர்களை போல் இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 700 ஏக்கர் வரை உளுந்து, பாசி, மக்காச்சோள பயிர்கள் பயிரிட்டுள்ளனர். இந்த பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து அவற்றை நோயில் இருந்து காப்பாற்றி வளர்கின்றனர்.

இந்த நிலையில் கங்கைகொண்டான் மான் பூங்காவில் இருந்து இரைதேடியும், தண்ணீருக்காகவும் பூங்காவை விட்டு வெளியேறிய நூற்றுக்கும் மேற்பட்ட மான்கள் ஆடு, மாடுகளை போல் மொத்தமாக இவர்கள் பயிரிடப்பட்ட இடங்களில் நள்ளிரவில் மேய்கின்றன. மேலும் அப்பயிர்களை நொடித்து நாசமாக்கி அழித்து விடுகின்றன. இதனால் அறுவடை செய்யக்கூடிய நேரத்தில் பயிர்கள் நாசமானதை கண்டு விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வீடுகளில் உள்ள பொருட்களை வங்கிகளில் அடமானம் வைத்து வட்டிக்கு கடன் வாங்கி பயிரிட்டும் பயனில்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News