search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் வேதனை"

    • தாங்கல் ஏரியை நம்பி 100-க்கும் மேற்பட்ட விளைநிலங்கள் உள்ளது
    • நள்ளிரவு ஏரியின் மதகு அருகே கரை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தில் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாங்கல் ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பி 100-க்கும் மேற்பட்ட விளைநிலங்கள் உள்ளது

    நள்ளிரவு ஏரியின் மதகு அருகே கரை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    இந்த ஏரியை நம்பி ஏராளமான விவசாயிகள் உள்ளனர். ஒரு வார காலத்திற்கு பிறகு மழை ஓய்ந்து இருந்த நிலையில் இந்த ஏரி உடைப்பை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆறு , கெடிலம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றது.

    கடலூர்:

    தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் கடலூர், பண்ருட்டி ,நெய்வேலி, விருத்தாச்சலம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, சேத்தியாதோப்பு, காட்டு மன்னார்கோவில் ,திட்டக்குடி மற்றும் மாவட்டம் முழுவதும் மிக கனமழை பெய்தது.இந்த மழையானது நேற்று மதியம் வரை இருந்த நிலையில் மீண்டும் இரவு தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் முக்கிய சாலைகளில் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியதோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்ற பகுதிகளில் தயார் நிலையில் இருந்ததோடு மழை நீர் வடிவதற்காகவும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஆகியவற்றை தீவிரமாக செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கடலூர்தென் பெண்ணையாறு மற்றும் கெடிலம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகின்றது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு சாத்தனூர் அணையில் இருந்து 2000 கன அடி உபரி நீர் திறந்த காரணத்தினால் கண்டரக்கோட்டை, மேல்பட் டாம்பாக்கம் வழியாக கடலூர் தென்பெண்ணையாற்றில் நீர் பெருக்கு அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக கொமந்தாமேடு, மருதாடு தரைப்பாலத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் இன்று காலை வரை விநாடிக்கு 2500 கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதில் கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 2 அணைக்கட்டு மற்றும் 4 தடுப்பணைகள் நிரம்பி கடலூர் கொமந்தாமேடு வழியாக 2500 கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது சாத்தனூர் அணையில் இருந்து 950 கன அடி தண்ணீர் வெளியேற்றும் நிலையில் இந்த தண்ணீர் கடலூர் மாவட்டத்திற்கு வராது

     அதற்கு மாறாக கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக கன மழை பெய்து வந்த காரணத்தினால் தற்போது தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகின்றது. தற்போது மழை அளவு குறைந்த காரணத்தினால் தென்பெண்ணை ஆற்றில் படிப்படியாக தண்ணீர் ஓடுவது கணிசமாக குறையும். இது மட்டும் இன்றி கெடிலம் ஆற்றில் தற்போது வினாடிக்கு 500 கன அடி நீர் சென்று வருகிறது.கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆறு , கெடிலம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றது. 2 நாட்கள் பெய்த கன மழை காரணமாக தென்பெண்ணையாற்றில் 2500 கன அடி தண்ணீர் வினாடிக்கு சென்று வரும் நிலையில் கடலில் வீணாக கலந்து வருவதால் இதனை தடுத்து விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் உயர்வதற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

    • வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளதால் 1 கிலோ ரூ.12க்கு விற்பனையாகிறது. இதனால் முருங்கை சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
    • விதை, உரம், உழவு, நடவு கூலி, செடிகளுக்கு மருந்து, வண்டி வாடகை, கமிசன் போன்ற பல்வேறு செலவுகளை சமாளித்து விற்பனைக்கு கொண்டு வந்தால் கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெ ட்டிற்கு அம்பிளிக்கை, அரசபிள்ளைபட்டி, கேதையரும்பு, கீரனூர், சாமியார்புதூர், காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து முருங்கை, தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக இந்த கிராமங்க ளில் செடி முருங்கை அதிக அளவு விளைவிக்கப்படு கிறது.

    விளைச்சல் அதிகரித்து ள்ளதால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே 1 கிலோ ரூ.12க்கு விற்பனையாகிறது. இதனால் முருங்கை சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தாங்கள் உற்பத்தி செய்த செலவு கூட கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்து ள்ளனர்.

    முருங்கைக்காயை பறித்து எடுக்க நாள் ஒன்றுக்கு நபருக்கு ரூ.400 கூலி கொடுக்க வேண்டியு ள்ளது. விதை, உரம், உழவு, நடவு கூலி, செடிகளுக்கு மருந்து, வண்டி வாடகை, கமிசன் போன்ற பல்வேறு செலவுகளை சமாளித்து விற்பனைக்கு கொண்டு வந்தால் கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனவே முருங்கைக்கு நிரந்தர விலை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் கடந்த மாதம் வரை 1 கிலோ தக்காளி ரூ.100 மற்றும் அதற்கும் மேல் விற்பனையானது. வரத்து குறைவால் விலை அதிகரித்த நிலையில் தற்போது விலை குறைந்து வருகிறது. 14 கிலோ கொண்ட 1 பெட்டி ரூ.700க்கு விற்பனையாகிறது. 1 கிலோ ரூ.50 முதல் ரூ.55 வரை கொள்முதல் செய்யப்படு கிறது. தற்போது தக்காளி செடிகளில் பூக்கள் பூத்துள்ள சமயத்தில் மழை பெய்து ள்ளதால் விலை மீண்டும் அதிகரிக்கும் என விவ சாயிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த மாதத்தை ஒப்பிடும் போது தக்காளி விலை குறைந்து வருவதால் இது மேலும் விலை குறையும் என்று எதிர்பார்த்த விவசாயிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆவணி மாதம் முகூர்த்த நாட்கள் அதிகரிக்கும் என்பதால் காய்கறிகளின் தேவையும் கூடும். அந்த சமயத்தில் பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்து வருவது விவசாயிகளை வருத்த மடைய வைத்துள்ளது.

    • அபிராமம் பகுதியில் பருத்தி விலை குறைவால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
    • நெல் பயிரிட்ட விவசாயிகள் அரசின் நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு நிவாரணத்தை நம்பி காத்திருக்கின்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதால் வைகை பாசன பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் நெல் விவசாயம் கருகி நஷ்டம் ஏற்பட்டுவிட்டது.

    நெல் பயிரிட்ட விவசாயிகள் அரசின் நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு நிவாரணத்தை நம்பி காத்திருக்கின்றனர்.

    இந்தநிலையில் நெற்பயிர்களை அறுத்துவிட்டு அதில் பருத்தியை விவசாயிகள் பயிரிட்டனர். நவம்பர்மாத இறுதியில் தொடங்கிய பருத்தி சாகுபடி பணிகள் தற்போது ஒரளவுக்கு விளைய தொடங்கி உள்ளது.

    முதல் போக சாகுபடி செய்து அறுவடை செய்ய தெடங்கியுள்ள விவசாயிகள் அதனை விற்பனை செய்ய கமிஷன் கடைக்கு கொண்டு சென்றபோது அங்கு விவசாயிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    கடந்த ஆண்டு பருத்தி நன்றாக விளைந்ததோடு மட்டுமில்லாமல் அதிக விலைக்கு விற்பனையானது. இந்த ஆண்டு பருத்தி ஓரளவுக்கு விளைந்த போதும் உரிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    இதுகுறித்து அபிராமம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு பருத்தி நல்ல மகசூல் இருந்தபோதும், நல்ல விலையும் கிடைத்தது. ஒரு கிலோ பருத்தி ரூ.60 முதல் ரூ.110 வரை கிடைத்தது. இந்த ஆண்டு பருத்தியை ஆரம்பத்தில் அறுவடை செய்து கமிஷன் கடைக்கு கொண்டு சென்றபோது ரூ.65-க்கு தான் வாங்குகின்றனர்.

    விலை உயரும் என்ற நம்பிக்கையுடன்தான் தொடர்ந்து பருத்தியை பிரித்தெடுக்கும் பணி செய்து வருகிறோம். அரசு பருத்தி விலையை நிர்ணயம் செய்து விவசாயிகளின் மனக்கவலையை போக்க வேண்டும். பருத்தியில் நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது.

    மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், திருவாடனை, ஆர்.எஸ்.மங்கலம், முதுகுளத்தூர், பரமக்குடி, கடலாடி, கமுதி, அபிராமம் உள்ளிட்ட பகுதிகளில் நெல், மிளகாய்க்கு அடுத்தபடியாக பருத்தி விவசாயம் செய்துவருகிறேம்.

    இந்த ஆண்டு பருத்தியில நோய் தாக்குதலும் அதிக மாக உள்ளது. சில நாட்களுக்கு முன் பெய்த கோடை மழை பருத்தி பயிருக்கு ஏற்ற மழையாகும். பருத்திக்கு விலை ஓரளவாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தக்காளியை பதப்படுத்தி இருப்பு வைக்க போதிய வசதி இல்லை. அறிவிப்பு வெளியிடப்பட்டும் நடைமுறைக்கு வரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
    • உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த சில வாரங்க ளாகவே தக்காளி விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. 1 கிலோ ரூ.10க்கும் கீழ் சென்றதால் விவசாயிகளே வாகனங்களில் வைத்து நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். ஒட்டன்சத்திரம், அம்பி ளிக்கை, இடையகோட்டை, வடகாடு, கேதையறும்பு, விருப்பாச்சி, தங்கச்சி யம்மாபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தக்காளி சாகுபடி செய்ய ப்பட்டு வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் தக்காளி ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படு கிறது.

    பின்னர் நெல்லை, மதுரை உள்ளிட்ட நகரங்க ளுக்கும் கேரள போன்ற வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு கடந்த 1 மாதமாகவே மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. தற்போது 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ரூ.70க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

    1 கிலோ ரூ.5 முதல் ரூ.6 வரை மட்டுமே கிடைப்பதால் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். தக்காளியை பதப்படுத்தி இருப்பு வைக்க போதிய வசதி இல்லை என்றும் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். எனவே தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    • அபிராமம் பகுதியில் உலர்களம் இல்லாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
    • போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் உள்ள தரைக்குடி, வல்லகுளம் தேவநேரி அச்சங்குளம் உள்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக விவசாயிகள் சிறுதானிய பயிர்களை விவசாயம் செய்கின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மிளகாய் பயிரிட்டனர்.

    இந்த ஆண்டு போதிய பருவமழை இல்லததால் விவசாயிகள் தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டனர். போர்வெல் அமைத்து தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்தனர். இதன் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிளகாய் விளைச்சல் குறைந்துள்ளது. மேலும் போதிய மழை யின்றி செடியிலேயே மிளகாய் சோடையாகி போனது. இதனால் விவசாயிகள் கூலி ஆட்களை வைத்து மிளகாய் பறித்து உலரவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கிராமங்களில் உலர்களங்கள் வசதி இல்லாததால் விவசாயிகள் நிலம், சாலையோரம் கால்வாய் புறம்போக்கு வாய்க்கால்புறம்போக்கு போன்ற இடங்களில் மிளகாய் மற்றும் சிறுதானியங்களை உலர வைக்கின்றனர். உலர்களம் இல்லாமல் மண் தரையில் உளர வைப்பதால் மிளகாயின் தரம் குறைவதால் மிளகாய் விலை குறையும் நிலை உள்ளது.

    இதனால் அபிராமத்திற்கு உள்பட்ட கிராமங்களில் உலர் களங்கள் அமைக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மிளகாய், பருத்தி செடிகளை நாசம் செய்யும் காட்டு பன்றிகளால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
    • வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    அபிராமம்

    இந்த ஆண்டு பருவமழை இல்லாததால் ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் உள்ள 250-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மனமுடைந்த நிலையில் மிளகாய், பருத்தி செடிகளை காட்டு பன்றிகள் நாசம் செய்கின்றன. இதனால் விவசாயிகள் என்ன செய்வது? என்ற மனகுழப்பத்தில் உள்ளனர்.

    இதுகுறித்து விவசாய சங்க தலைவர் முத்துராமலிங்கம் கூறுகையில், அபிராமம் பகுதியில் உள்ள மிளகாய், பருத்தி செடிகளை காட்டு பன்றிகள் நாசம் செய்து வருகிறது. காட்டு பன்றிகளுக்கு பயந்து இந்த ஆண்டு நிலக்கடலை விவசாயத்தை விவசாயிகள் பயிரிடவில்லை.

    காட்டு பன்றிகள் தொல்லை குறித்து வேளாண் மற்றும் வனத்து றையினரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. காட்டு பன்றிகளால் பாதிக்கப் படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • குறிஞ்சிப்பாடியில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளன.
    • சம்பா நெல் பயிர்களை புகையான் பூச்சி படையெடுத்து தாக்கி அழித்து வருகிறது.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடிக்கு அருகில் உள்ள கல்குணம் பூதம்பாடி ஓணாங்குப்பம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கன மழை பெய்ததால் நீரில் மூழ்கி நெல் பயிர்கள் மடிந்தன.

    தற்போது அறுவடைக்கு தயாராக இருக்கும் சம்பா நெல் பயிர்களை புகையான் பூச்சி படையெடுத்து தாக்கி அழித்து வருவதால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். இந்த புகையான் பூச்சிகளை அழிக்க பல கம்பெனிகளின் மருந்துகளை தெளித்தும் பயனில்லை. இது தொடர்பாக வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை அளிக்க முன்வரவில்லை.

    எனவே, வேளாண்துறை உயரதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளை காப்பாற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கல் குணம்மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் அடிக்கடி இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டு வருவதால் தனி கவனம் செலுத்தி விவசாய நிலங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

    • 300 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பரவில் மக்கா ச்சோளம் பயிர் செய்துள்ள னர்.
    • மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் காணப்பட்டது. மருந்து தெளித்தும் பயனில்லை .

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே அகரகோட்டாலம் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 300 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பரவில் மக்கா ச்சோளம் பயிர் செய்துள்ள னர். தொடர்ந்து விவசாயிகள் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சி, உரமிட்டு பராமரித்து வந்தனர். இந்நிலையில் மக்காச்சோள பயிரில் கடந்த சில வாரங்க ளாக படைப்புழுக்கள் தாக்குதல் காணப்பட்டது. இதை யொட்டி விவசாயிகள் பயிர்களுக்கு மருந்து தெளித்த னர். இருப்பினும் மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் குறையவில்லை என கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து அகர கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் (வயது 44) ஆட்டோ டிரைவர். இவர் தனக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலத்தில் கடந்த 60 நாட்களுக்கு முன்பு மக்காச்சோளம் பயிரிட்டு பராமரித்து வருகிறார். இந்நிலையில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் காணப்பட்டது. மருந்து தெளித்தும் பயனில்லை புழுக்கள் சாகாமல் உயிருடன் இருக்கிறது.

    ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் செலவு செய்து பயிர்களை பராமரித்து வந்த நிலையில் படைப்புழுக்கள் தாக்குதலால் பயிர்கள் நாசமாகி போனது. எனவே சம்மந்தப்பட்ட வேளாண்மை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் மேலும் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மருந்து வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • அதிகாலை கரையை கடந்ததின் காரணமாக காற்றின் வேகம் அதிகரித்து கன மழை பொழிந்தது.
    • விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் சுற்றுவட்டா ரங்களில் மாண்டஸ் புயல் அதிகாலை கரையை கடந்ததின் காரணமாக காற்றின் வேகம் அதிகரித்து கன மழை பொழிந்தது. இந்நிலையில் செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் செஞ்சி, ஊரணிதங்கள், அனந்தபுரம், மேல்ம லையனூர், அவலூ ர்பேட்டை ஆகிய பகுதி களில் பயிரிடப்பட்ட சுமார் 200 ஏக்கர் நெற்பயி ர்கள் நீரில் மூழ்கி காற்றின் வேகத்தன்மையால் நெல் பயிர்கள் சாய்ந்தது. இத னால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்து ள்ளனர்.

    இந்நிலையில் ஊரணி தாங்கல் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவருடைய விளைநிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்யிர்கள் நீரில் மூழ்கியதால் கடும் வேதனை அடைந்துள்ளனர். ஆறு மாதமாக பாதுகாக்கப்பட்டு வைத்திருந்த நெற்கதி ர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனவே மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு வேளாண்துறை சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • காரியாபட்டி, நரிக்குடி பகுதியில் நெற்கதிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    • காட்டுப்பன்றிகளை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காரியாபட்டி

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி நரிக்குடி பகுதிகளில் மழை பெய்தும் வைகை ஆற்றில் இருந்து கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்டதால் கட்டனூர், சீனியேந்தல், இருஞ்சிறை, உலக்குடி, மானூர், மறையூர், நரிக்குடி உள்பட 25-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பிய காரணத்தினால் விவசாயிகள் நெல் நடவு செய்தனர்.

    தற்போது நெல் பரிச்சல் ஏற்படும் தருவாயில் உள்ளது. இந்த நேரத்தில் நரிக்குடி அருகே உள்ள சீனியேந்தல், கட்டனூர் காரியாபட்டி அருகே உள்ள டி.வேப்பங்குளம், எஸ்.கடமங்குளம், உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ளவிவசாய நிலங்களில் நெற்கதிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். காட்டுப்பன்றிகளை ஒழிக்காவிட்டால் விவசாயம் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.

    இதுகுறித்து காவிரி, வைகை, கிருமால் நதி, குண்டாறு பாசன விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் மச்சேசுவரன் கூறியதாவது:-

    நரிக்குடி பகுதியில் கடந்த 20 ஆண்டு காலமாக எந்த ஒரு கண்மாயும் நிரம்பாத நிலையில் இருந்து வந்தது. கடந்த 2,3 வருடங்களாக கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்டு இந்த பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பியதற்கு பின்பு வயல் பகுதியில் சீமைகருவேல் மரங்கள் அடர்ந்திருந்ததை அப்புறப்படுத்தி நெல் நடவு செய்து உள்ளனர்.

    விவசாயிகள் வட்டிக்கு வாங்கி விவசாயம் செய்துள்ள நிலையில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் நெற்பயிர்களை நாசம் செய்து வருகிறது. காட்டுப் பன்றிகளை ஒழிக்காவிட்டால் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகிவிடும். காட்டுப்பன்றிகளை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2 மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக தாதா ராவ் ஏரியும் முழுவதுமாக நிரம்பியது.
    • நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது எனவும்அப்பகுதி மக்கள், விவசாயிகள் கூறினர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜூஜூவாடி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில்,கீரை வகைகள், முள்ளங்கி,கத்தரிக்காய், பீட்ரூட், வாழை மற்றும் கொத்தமல்லி உள்ளிட்டவிவசாய பயிர்களை விவசாயிகள் விளைவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த, 2 மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக தாதா ராவ் ஏரியும் முழுவதுமாக நிரம்பியது.

    ஆனால், உபரி நீர் வெளியே செல்ல வழியின்றி, சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய நிலங்களில் 3 அடிக்கு மேல் ஏரி நீர் சூழ்ந்துவிட்டது. 2 மாதங்களாகியும் விளை நிலங்களில் உள்ள தண்ணீர் வற்றவோ, வெளியேறவோ வழி இல்லாமல் விளைநிலங்களில் தேங்கி நிற்பதால் விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்து மிகுந்த நஷ்டத்திற்கு தள்ளப்பட்டதாக, அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    மேலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய முடியவில்லை என்றும், தற்போது இரண்டு மாதங்களாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், பயிர்கள் மழை நீரில் அழுகி தற்போது அந்த தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதுடன் புழுக்கள் உற்பத்தியாகி வருவதாகவும் இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது எனவும்அப்பகுதி மக்கள், விவசாயிகள் கூறினர்.

    மேலும், 25 வருடங்களாக நிரம்பாத ஏரி தற்போது பெய்த மழையினால் நிரம்பியிருப்பது, ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும் மறுபுறம் ஏரியின் உபரி நீர் வெளியேற வழியின்றி, விவசாய பயிர்களை சூழ்ந்து, விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியிருப்பது கவலையை தருகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

    எனவே இனியாவது மாவட்ட நிர்வாகம், உடனடியாக ஏரியின் உபரி நீரை வெளியேற்ற வழிவகை செய்து, விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×