செய்திகள்
மல்லிகைப்பூ

திருப்பூரில் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூ விலை கிடுகிடு உயர்வு

Published On 2020-12-28 10:12 GMT   |   Update On 2020-12-28 10:12 GMT
தமிழகத்தின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவு இருப்பதால் திருப்பூருக்கு நேற்று பூக்களின் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. இதன் காரணமாக மல்லிகைப்பூ அதிகபட்சமாக கிலோ ரூ.2,400-க்கு விற்பனையானது.
திருப்பூர்:

திருப்பூர் பல்லடம் ரோடு காட்டன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள பூ மார்க்கெட்டிற்கு தமிழகம், மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் இருந்து மல்லிகைப்பூ, முல்லை, அரளி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. வழக்கமாக சாதாரண நாட்களில் சுமார் 30 டன் வரை பூக்கள் விற்பனை ஆகும்.

ஆனால் தற்போது கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு இருந்து வருவதால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. திருப்பூருக்கு நாளுக்கு நாள் பூ வரத்து குறைந்து வருகிறது. குறிப்பாக மல்லிகைப்பூ சுமார் ஒரு டன் வரையில் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று சுமார் 100 கிலோ மல்லிகைப்பூ மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இதன் காரணமாக மல்லிகைப்பூவின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ படிப்படியாக விலை உயர்ந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.1,600-க்கு விற்பனையானது.

இந்த நிலையில் நேற்று பூவின் தரத்திற்கேற்ப மல்லிகைப்பூ கிலோ ரூ.2,000 முதல் ரூ.2,400 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் முல்லை கிலோ ரூ.1,000, ஜாதிமல்லி ரூ.800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அரளி, செவ்வந்தி, சம்பங்கி, பட்டுப்பூ, ரோஜா உள்ளிட்டவை வழக்கமான விலையில் விற்கப்பட்டன. மல்லிகைப்பூ விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை கவலை அடைய செய்துள்ளது.
Tags:    

Similar News