செய்திகள்
கோப்பு படம்.

அவினாசியில் மகளை தாக்கி குப்பையில் வீசி வி‌ஷம் குடித்த பெங்களூர் பெண் டாக்டர்

Published On 2020-12-26 09:24 GMT   |   Update On 2020-12-26 09:24 GMT
கொரோனாவால் வருமானம் இல்லாத விரக்தியில் மகளை தாக்கி குப்பையில் வீசி வி‌ஷம் குடித்த பெங்களூர் பெண் டாக்டருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவினாசி:

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தண்டுக்காரன் பாளையத்தில் குப்பை பிரிக்கும் இடம் உள்ளது. இங்கு நேற்று மாலை 7 வயது சிறுமியை இளம்பெண் ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டிருந்தார்.

வலி தாங்க முடியாமல் சிறுமி அலறி சத்தம்போட்டார். சத்தம் கேட்டு அங்கிருந்த விவசாய கூலித்தொழிலாளர்கள் ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்த இளம்பெண் சிறுமியை குப்பையில் தள்ளி விட்டு தன்னிடம் இருந்த 3 பைகளையும் வீசிவிட்டு தப்பி சென்றார். விரைந்து வந்த பொதுமக்கள் காயத்துடன் மயங்கி கிடந்த சிறுமியை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மேற்கொண்ட பரிசோதனையில் சிறுமி தாக்கப்படுவதற்கு முன்பு அவருக்கு அளவுக்கு அதிகமாக இருமல் மருந்து கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் சிறுமியின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படை அமைத்து சிறுமியை தாக்கி குப்பையில் வீசி சென்ற இளம்பெண்னை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு தண்டுக்காரன்பாளையம் பகுதியில் ஒரு இளம்பெண் சுற்றித்திரிந்தார். சந்தேகத்தின் பேரில் பொதுமக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதன் விவரம்:-

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் சைலஜாகுமாரி (வயது 39) என்பதும், காது, மூக்கு, தொண்டை டாக்டராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் கருத்துவேறுபாடு காரணமாக தனது கணவர் முத்துசாமி (42) என்பவரை பிரிந்து தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கொரோனா காரணமாக போதிய வருமானம் இன்றி தவித்து வந்த டாக்டர் சைலஜாகுமாரி மன உளைச்சலிலும் இருந்துள்ளார். இதையடுத்து திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள ஒரு சர்ச்சில் தஞ்சமடைய தனது மகளுடன் வந்துள்ளார். ஆனால் வரும் வழியில் சைலஜாகுமாரிக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றி உள்ளது. இதையடுத்து தனது மகளுக்கு இருமல் மருந்தை கொடுத்து விட்டு சைலஜாகுமாரி எலி மருத்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து போலீசார் சைலஜாகுமாரியை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News