செய்திகள்
ஆன்லைன் மூலம் கடன்

ஆன்லைன் மூலம் கடன் பெற்று ஏமாற வேண்டாம்- பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள்

Published On 2020-12-24 10:02 GMT   |   Update On 2020-12-24 10:02 GMT
ஆன்லைன் மூலம் கடன் பெற்று ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை:

மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று வெளியிட்ட விழிப்புணர்வு அறிக்கை ஒன்றில் கூறி இருப்பதாவது:-

தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக சமீபத்தில் இணையதள குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடன் தருவதாக ஆன்லைன் ஆப் மூலம் பொதுமக்களை ஏமாற்றி வரும் செயலிகளிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும், என்பதற்காக இந்த விழிப்புணர்வு தகவல் வெளியிடப்படுகிறது.

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சுமார் 60 ஆன்லைன் கடன் அப்ளிகேசன்களும் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்படவில்லை. எனவே இந்த கடன் அப்ளிகேசன்களின் செயல்பாடுகள் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்படாதவை.

இந்த கடன் அப்ளிகேசன்களை பயன்படுத்தும் பொதுமக்களின் செல்போன் தகவல்கள் அனைத்தையும் சேகரித்து அவை தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. பொதுமக்களின் தனிப்பட்ட உரிமைகளை மீறும் வகையில் இது அமைந்துவிடும்.

இது போன்ற கடன் அப்ளிகேசன்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட ரகசியங்கள், ஆதார் மற்றும் தனது வங்கி கணக்கு சம்பந்தப்பட்ட வி‌‌ஷயங்களை இது போன்ற கடன் அப்ளிகேசன்களில் கொடுக்க வேண்டாம்.

* பொதுமக்கள், இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத கடன் அப்ளிகேசன் துறையினரிடம் இருந்து மிரட்டல், அச்சுறுத்தல் ஏதேனும் வந்தால் உடனே போலீசில் புகார் கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

* இது போன்ற கடன் அப்ளிகேசன்களின் உண்மைத்தன்மை பற்றி ரிசர்வ் வங்கியின் வலைதளத்தில் சரிபார்த்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News