செய்திகள்
மருத்துவக் கலந்தாய்வு

மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற மாணவி மீது போலீசார் வழக்குப்பதிவு

Published On 2020-12-14 01:47 GMT   |   Update On 2020-12-14 01:47 GMT
‘நீட்’ போலி சான்றிதழ் மூலம் மருத்துவ கலந்தாய்வில் பங்கு பெற்ற மாணவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த மாணவியின் தந்தையும் போலீஸ் வழக்கில் சிக்கினார்.
சென்னை:

இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நீட் தேர்வு முறைகேடு வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர் மற்றும் இடைத்தரகர்கள் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட 10 தேடப்படும் முக்கிய குற்றவாளிகளின் பெயர் பட்டியலை புகைப்படத்துடன் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வெளியிட்டனர். இவர்கள் பற்றிய உண்மையான விவரங்களை கண்டுபிடித்து கைது செய்ய, சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர்.

இதற்காக பெங்களூருவில் உள்ள ஆதார் ஆணையத்துக்கு 10 குற்றவாளிகளின் புகைப்படங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுப்பி வைத்தனர். புகைப்படத்தை வைத்து 10 குற்றவாளிகளின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆதார் ஆணையம் கைவிரித்து விட்டது. அதனால் அந்த 10 குற்றவாளிகளை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த அதிர்ச்சி அலைகள் ஓய்ந்துபோன நிலையில், சென்னையில் ‘நீட்’ தேர்வு சம்பந்தமாக இன்னொரு பூகம்பம் வெடித்துள்ளது.

சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வில் போலி ‘நீட்’ சான்றிதழுடன் மாணவி ஒருவர் கலந்து கொண்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, நேரு நகரைச் சேர்ந்த அந்த மாணவியின் பெயர் தீக்ஷா (வயது 18). அவரது தந்தையின் பெயர் பாலச்சந்திரன். பல் டாக்டரான இவர் கடந்த 7-ந் தேதி அன்று தனது மகள் தீக்ஷாவுடன், மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்றார். அப்போது அவர் தாக்கல் செய்த ‘நீட்’ தேர்வு சான்றிதழ் போலியானது என்று கண்டறியப்பட்டது.

அந்த மாணவி ‘நீட்’ தேர்வில் பெற்ற உண்மையான மதிப்பெண் 27. ஆனால் மருத்துவ கலந்தாய்வில் சமர்ப்பித்த சான்றிதழில் 610 மதிப்பெண்கள் பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

பரமக்குடியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் மையம் மூலமாக 610 மதிப்பெண் பெற்ற இன்னொரு மாணவியின் சான்றிதழில் பெயர் மற்றும் புகைப்படத்தை மாற்றி போலி சான்றிதழ் தயாரித்துள்ளனர். மாணவி தீக்ஷாவின் போலி சான்றிதழ் விவகாரம் தற்போது விஸ்வரூபமெடுத்துள்ளது. அந்த மாணவி மற்றும் அவரது தந்தை மீது சென்னை பெரியமேடு போலீசில், மருத்துவ கலந்தாய்வு குழு தலைவர் செல்வராஜ் புகார் கொடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் பெரியமேடு போலீசார் 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாணவி தீக்ஷாவும், அவரது தந்தையும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.

போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்த பரமக்குடி கம்ப்யூட்டர் மையத்தின் உரிமையாளர் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. இதுபற்றி விசாரிக்க தனிப்படை போலீசார் பரமக்குடி விரைந்துள்ளனர். இந்த வழக்கும் சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News