செய்திகள்
கோப்பு படம்.

கடையநல்லூரில் வறுமை காரணமாக ஒரு மாத பெண் குழந்தையை ரூ.20 ஆயிரத்துக்கு விற்ற தம்பதி

Published On 2020-12-06 07:27 GMT   |   Update On 2020-12-06 07:27 GMT
கடையநல்லூரில் வறுமை காரணமாக பெற்ற குழந்தையை தம்பதி ரூ. 20 ஆயிரத்துக்கு விற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை:

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன், கூலி தொழிலாளி. இவரது மனைவி பனிமலர். இவர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் 10-ந்தேதி பெண் குழந்தை பிறந்தது.

முருகன் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு குழந்தையை வளர்ப்பதில் கஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர்கள் வறுமையை சமாளிப்பதற்காக குழந்தையை விற்க முடிவு செய்தனர்.

இதற்காக அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்பவரை நாடியுள்ளனர். அவர் சாம்பவர் வடகரை தேரடி தெருவை சேர்ந்த பொன்னுதாயிடம் தம்பதியினரை அழைத்து சென்றுள்ளார். பின்னர் 4 பேரும் சேர்ந்து குழந்தையை விற்பதற்காக பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.

அப்போது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ராணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரிடம் நடந்த விபரத்தை கூறி குழந்தையை விற்க முடிவு செய்தனர். இதற்காக ராணி ரூ.20 ஆயிரம் பணத்தை தம்பதியினருக்கு கடந்த மாதம் 12-ந்தேதி கொடுத்துள்ளார். பின்னர் மறுநாள் 13-ந்தேதி பனிமலர்-முருகன் தம்பதியினர் தாங்கள் பெற்ற ஒரு மாத பெண் குழந்தையை ராணியிடம் விற்றனர்.

இதற்கிடையே குழந்தையை காணாததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்துள்ளனர். அவர்கள் கேட்டதற்கு தம்பதியர் 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் நெல்லையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

அதன்பேரில் நெல்லை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவு சமூக பணியாளர் செலினா விசாரணை நடத்தினார். அதில் தம்பதியர் வறுமை காரணமாக குழந்தையை புரோக்கர்கள் மூலமாக விற்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் உடனடியாக கடையநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் குழந்தையை விற்ற முருகன்-பனிமலர் தம்பதி மற்றும் விற்பதற்கு உடந்தையாக செயல்பட்ட சரஸ்வதி, பொன்னுதாய், ராணி ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வறுமையால் பெற்ற குழந்தையை விற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News