செய்திகள்
கனமழை தொடர்ந்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவு

4-வது நாளாக கொட்டி வரும் மழை: கொடைக்கானல்-பழனி சாலையில் நிலச்சரிவு

Published On 2020-12-05 07:51 GMT   |   Update On 2020-12-05 07:51 GMT
கொடைக்கானலில் 4-வது நாளாக இன்றும் கனமழை தொடர்ந்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.

கொடைக்கானல்:

புரெவி புயல் காரணமாக கொடைக்கானலில் கடந்த 2-ந் தேதி இரவு முதல் இடைவிடாது கன மழை கொட்டித்தீர்த்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில் இன்று காலை தூறலாக மாறியது. தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானல் - பழனி மலைச்சாலையில் 21-வது கொண்டை ஊசி வளைவில் கட்டப்பட்டு இருந்த தடுப்பு சுவர் சேதமடைந்து மண் சரிவும் ஏற்பட்டது. இன்று காலை சவரிக்காடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வேரோடு மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் இந்த சாலையில் கடந்த 3 நாட்களாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தொடர் மழை பெய்து வருவதால் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் மட்டுமே மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொடைக்கானலில் புயல் பாதிப்பு அதிகம் ஏற்படும் என்று முன்னரே தெரிந்திருந்தும் பேரிடர் மீட்பு குழு யாரும் வரவழைக்கப்படவில்லை. இதனால் தீயணைப்பு துறையினரே மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

புயல் காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. வத்தலக்குண்டு சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் இன்று முதல் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையிலும் பல்வேறு இடங்களில் பாறைகள் விழுந்து மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பழனி அடுக்கம் சாலையில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் அங்கு சென்று அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். லேக் ரோடு மற்றும் மன்னவனூர் செல்லும் சாலையிலும் மரங்கள் வேரோடு சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.

இதனால் பல கிராமங்கள் 4-வது நாளாக இருளில் மூழ்கி கிடக்கின்றன. செல்போன் சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவசர தேவைக்கு கூட யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை முற்றிலும் நிற்கும் வரை பாதிப்புகளும தொடர்ந்து கொண்டே இருக்கும் என கொடைக்கானல் மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News