செய்திகள்
கொண்டைக்கடலை

ரேஷன் கடைகளில் இலவசமாக தலா 5 கிலோ கொண்டைக்கடலை- இன்று முதல் வினியோகம்

Published On 2020-12-02 08:45 GMT   |   Update On 2020-12-02 08:45 GMT
திருச்சி மாவட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரேஷன் கடைகளில் தலா 5 கிலோ கொண்டைக்கடலை, இன்று (புதன்கிழமை) முதல் வினியோகிக்கப்படுகிறது.
திருச்சி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. தமிழக அரசின் பொது வினியோகத்திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் கொரோனா காலக்கட்டத்தில் ஒரு மாதம் மட்டும் ரூ.1,000 வழங்கப்பட்டது.

தொடர்ந்து 3 மாதங்கள் அரிசி, துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை ஆகியவை இலவசமாக தமிழக அரசால் வழங்கப்பட்டது. அதேபோல கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி மத்திய அரசின் திட்டத்தின் கீழும் இலவசமாக வழங்கப்பட்டது. கடந்த மாதத்துடன் அத்திட்டம் நிறைவு பெற்றது.

அதையடுத்து கொரோனா காலத்தில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 1 கிலோ கொண்டைக்கடலையை இலவசமாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

அதாவது மத்திய அரசின் திட்டத்தில் அந்தியோதயா அன்னயோஜனா (ஏ.ஏ.ஒய்) மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்போர் ரேஷன் கார்டு (பி.எச்.எச்.) கார்டுகளுக்கு மட்டும் தலா 1 கிலோ வீதம் 5 மாதங்களை கணக்கீட்டு மொத்தமாக இந்த மாதம் (டிசம்பர்) 5 கிலோ கொண்டைக்கடலை இலவசமாக வழங்கப்படுகிறது. வறுமைகோட்டுக்கு மேல் உள்ள ரேஷன் கார்டு தாரர்கள் என வரையறுக்கப்பட்ட எம்.பி.எச். கார்டுதாரர்களுக்கு கொண்டைக்கடலை வழங்கும் திட்டம் இல்லை. அவர்களுக்கு துவரம்பருப்பு மட்டும் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் மேற்குறிப்பிட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு அனைத்து ரேஷன் கடைகளிலும் தலா 5 கிலோ கொண்டைக்கடலை இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 6-ந் தேதிவரை இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக கொண்டைக்கடலை பாக்கெட்டுகள் நேற்றே அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வந்து இறங்கி விட்டன.

அதற்காக, திருச்சியில் ஒவ்வொரு ரேஷன்கடை விற்பனையாளர்களும் நேற்று வீடு, வீடாகவும், ரேஷன் கடைகளிலும் கொண்டைக்கடலை வழங்க தகுதியுள்ள கார்டு தாரர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்தனர். துவரம் பருப்பு வாங்கக்கூடிய எம்.பி.எச். கார்டு தாரர்களுக்கு 7-ந் தேதி முதல் வரும் வகையில் டோக்கன்கள் வழங்கப்பட்டன.
Tags:    

Similar News