செய்திகள்
திருச்சி காந்தி மார்க்கெட் (கோப்பு படம்)

திருச்சி காந்தி மார்க்கெட்டில் 2-வது நாளாக கலெக்டர் ஆய்வு

Published On 2020-11-30 13:34 GMT   |   Update On 2020-11-30 13:34 GMT
திருச்சி காந்தி மார்க்கெட்டில் 2-வது நாளாக மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு ஆய்வு செய்தார்.
திருச்சி:

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக திருச்சி காந்தி மார்க்கெட் கடந்த மார்ச் மாதம் 27-ந்தேதி மூடப்பட்டது. காந்தி மார்க்கெட்டில் நடைபெற்ற மொத்த காய்கறி வியாபாரம் பொன்மலை ஜி கார்னர் தற்காலிக மார்க்கெட்டிற்கு மாற்றப்பட்டது. சில்லரை வியாபாரம் நகரில் 8 இடங்களில் நடந்து வந்தன.

கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததை தொடர்ந்தும், ஊரடங்கு உத்தரவில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் காந்தி மார்க்கெட் திறக்கப்படவில்லை. இதற்கு காரணம் கிருஷ்ணமூர்த்தி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தான். இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவின் காரணமாக காந்தி மார்க்கெட் தொடர்ந்து மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கோர்ட்டு தடை ஆணை விலக்கிக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து காந்தி மார்க்கெட் கடந்த வெள்ளிக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது. ஆனாலும் சுமார் 8 மாத காலமாக காந்தி மார்க்கெட் மூடப்பட்டு இருந்ததால் அதனை சுத்தப்படுத்தும் பணியும், வடிகால் வசதிகளை சீரமைக்கும் பணியும் முடிவடைந்த பின்னரே செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

மாநகராட்சி பணியாளர்கள் காந்தி மார்க்கெட்டின் அனைத்துப் பகுதிகளிலும் துப்புரவு பணிகளை மேற்கொண்டார்கள். இதன் பயனாக சுமார் 100 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. இந்த பணிகளை கலெக்டர் எஸ்.சிவராசு நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.

இந்நிலையில் நேற்று 2-வது நாளாக கலெக்டர் எஸ்.சிவராசு, காந்தி மார்க்கெட்டில் ஆய்வு செய்தார். மழைநீர் வடிகால் வசதிகள், பாதாள சாக்கடை குழாய்களில் ஏற்பட்ட உடைப்பு ஆகியவற்றை சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சீரமைப்பு பணிகளை விரைவாக முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Tags:    

Similar News