செய்திகள்
ஆயுள் தண்டனை

கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் எலக்ட்ரீசியனுக்கு ஆயுள் தண்டனை

Published On 2020-11-25 05:33 GMT   |   Update On 2020-11-25 05:33 GMT
கட்டிட தொழிலாளியை கொலை செய்த வழக்கில் எலக்ட்ரீசியனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
தூத்துக்குடி:

விளாத்திகுளம் அருகே உள்ள பல்லாகுளத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகன் மாரிச்சாமி (வயது 30). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 8.9.2014 அன்று அதே பகுதியை சேர்ந்த பூபதி என்பவரின் டிராக்டரில், வீட்டின் அருகே இருந்த குப்பைகளை உரத்துக்காக அள்ளிக் கொண்டிருந்தார்.

அப்போது, மாரிச்சாமியின் உறவினரான எலக்ட்ரீசியன் அதே பகுதியை சேர்ந்த ராமர் மகன் முனியசாமி (26) என்பவர் அங்கு வந்தார்.

முனியசாமிக்கும், பூபதிக்கும் ஏற்கனவே விரோதம் இருந்து வந்தது. இதனால் மாரிச்சாமியிடம், பூபதியின் டிராக்டரில் ஏன் குப்பையை ஏற்றுகிறீர்கள் என்று கேட்டு உள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த முனியசாமி, அருகில் கிடந்த உருட்டுக்கட்டையால் மாரிச்சாமியை தாக்கினார். இதில் மயங்கி விழுந்த மாரிச்சாமியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 11.9.14 அன்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சூரங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஹேமா, குற்றம் சாட்டப்பட்ட முனியசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யு.எஸ்.சேகர் ஆஜர் ஆனார்.
Tags:    

Similar News