செய்திகள்
அரசு பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைத்துக்கொடுத்த பெண்ணுக்கு கலெக்டர் கோவிந்தராவ் பாராட்டிய போது எடுத்தபடம்.

அரசுப்பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைத்த பெண்ணுக்கு கலெக்டர் பாராட்டு

Published On 2020-11-23 09:15 GMT   |   Update On 2020-11-23 09:15 GMT
கஜா புயலுக்கு வழங்கிய நிவாரண நிதியில் அரசு பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தந்த பெண்ணை கலெக்டர் கோவிந்தராவ் நேரில் வரவழைத்து பாராட்டினார்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே நாடாகாடு கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (வயது 36). இவருடைய கணவர் திருநீலகண்டன், 2016-ல் விபத்தில் இறந்து விட்டார். இவர்களுக்கு சாம்பவி (9) என்ற மகள் உள்ளார். பாக்கியலட்சுமி சில ஆண்டுகள் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்தார். கணவர் இறந்த பின் அந்த வேலையைவிட்டு விட்டு முழு நேர விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த 2018-ல் கஜா புயலில் இவருக்கு சொந்தமான 1½ ஏக்கர் தென்னந்தோப்பில் 90 சதவீதம் மரங்கள் சாய்ந்தன. தென்னை வருமானத்தை நம்பி இருந்த நிலையில், கடும் பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டது. இருப்பினும் பாக்கியலட்சுமி தன்னம்பிக்கையோடு மீண்டும் பொருளாதாரத்தில் முன்னேற உழைக்க துவங்கினர்.

இந்நிலையில், பேராவூரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வாலிபால் விளையாட்டு மைதானம் இல்லாமல், மாணவிகள் போட்டிகளில் கலந்துக்கொள்ள சிரமப்படுவதாக அறிந்ததை அடுத்து பாக்கியலட்சுமி அரசால் தனக்கு வழங்கப்பட்ட கஜா புயல் நிவாரண தொகை ரூ.1½ லட்சம் மூலம், வாலிபால் விளையாட்டு தளம் அமைத்து கொடுத்தார்.

இதுகுறித்து செய்தி தினத்தந்தியில் வெளியானது. இதையடுத்து பாக்கியலட்சுமியை கலெக்டர் கோவிந்தராவ் நேற்று முன்தினம் தனது அலுவலகத்துக்கு வரவழைத்து, தன்னலமற்ற சேவை மனப்பாண்மையை பாராட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து பாக்கியலட்சுமி கூறுகையில், கலெக்டரின் பாராட்டும், வாழ்த்தும் எனக்கு உற்சாகத்தையும், புதிய நம்பிக்கையையும் அளித்துள்ளது. இதே போல் மேலும் பல சமூகப்பணிகளில் ஈடுபட தூண்டுகோலாய் அமைந்துள்ளது” என்றார்.
Tags:    

Similar News